Skip to main content

150 நாள் வேலை கொடுப்பதா ஒ.பி.எஸ் சொல்றார்.. இங்கே 100 நாள் வேலைக்கே போராடுறோம்; ஊராட்சி ஒன்றியத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நூறுநாள் வேலைத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை மேலும், செய்த வேலைக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. கூலியும் குறைவாகவே தரப்படுகிறது எனவும் கூறுகின்றனர். எனவே, வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். சுழற்சிமுறை என்று சொல்லி வேலைவாய்ப்புகளை பறிக்கக்கூடாது. வேலை அட்டை இல்லாத அனைத்துக் குடும்பத்திற்கும் உடனடியாக வேலை அட்டை வழங்க வேண்டும். சட்டப்பூர்வ கூலி ரூ.229-ஐ குறைக்காமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

 

OPS is saying 150 days work; Here we are fighting for 100 days works; People who have besieged the Panchayat Union!

 

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.லாசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, 

வேலை வழங்காமல் திட்டத்தை சிதைப்பதையும், விவசாயத் தொழிலாளர்களைப் பட்டினி போடுவதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி. இந்தப் பகுதிக்கு 150 நாட்கள் வேலை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட 24 மாவட்டங்களில் 150 நாள் வேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. சமீபத்தில் வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு 150 நாட்கள் வேலை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தப் பகுதியில் 100 நாட்கள் கூட வேலை வழங்கப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்து மூன்று மாதங்களை கடந்த பின்பும் பணம் இன்றும் ஊராட்சிய ஒன்றிய அலுவலகங்களுக்கு வரவில்லை என அதிகாரிகள் புலம்புகின்றனர். 

 

OPS is saying 150 days work; Here we are fighting for 100 days works; People who have besieged the Panchayat Union!

 

மொத்தத்தில் மக்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை. குறைவான நாட்களே செய்த வேலைக்கும் சம்பளமும் கிடைக்கவில்லை. ஆனால், மோடி அரசும், எடப்பாடி அரசும் ஏழைகளுக்காகத்தான் எங்கள் அரசு என வாய்ச்சவடால் பேசி வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் நூறுநாள் வேலைச் சட்டத்தை சிறுகச்சிறுக செயல்படவிடாமல் முடக்குவோம் என்கிறார்கள். மோடி அரசு காஷ்மீரத்தில் 70 ஆண்டுகள் அமலில் இருந்த அந்த மக்களுக்கான சிறப்புச் சட்டம் 370-ஐ ரத்துசெய்துள்ளது. சட்டங்கள் இவர்கள் கையிலே சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடனடியாக வேலையைத் தொடர்ந்து வழங்குவதோடு, கூலியையும் குறைக்காமல் உரிய காலத்தில் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார். 

போராட்டத்திற்கு கறம்பக்குடி தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.சக்திவேல், வடக்கு ஒன்றியத் தலைவர் எம்.இளவரசு ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை தொடங்கி வைத்து கறம்பக்குடி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் எம்.உடையப்பன் பேசினார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.துரைச்சந்திரன், விதொச மாவட்டத் தலைவர் ஏ.பாலசுப்பிரமணியன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் த.அன்பழகன், எம்.பாலசுந்தரமூர்த்தி, விதொச மாவட்ட துணைத் தலைவர் எம்.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் வி.மணிவேல், ஒன்றியத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.

போராட்டத்தில் பேராட்டத்தைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் நலதேவன், அமுதவள்ளி ஆகியோரிடம் விவசயாத் தொழிலாளர்கள் தலைவர்கள் முன்னிலையில் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அடுத்த 15 நாட்களுக்குள் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலை வழங்குவதாக உறுதியளித்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் போராட்டத்தில் பங்கேற்றதால் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செவ்வாய்க்கிழமை பரபரப்புடன் காணப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்