தேனி பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரும், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில், துணை முதல்வரான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் 75 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றார். ஆனால் தமிழகத்தில் அதிமுக சார்பில் 38 பேர் பாராளுமன்ற தேர்தலில் போட்டி போட்டும் கூட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரை தவிர அனைவரும் படுதோல்வி அடைந்தனர்.
இந்த நிலையில் தான் மத்தியில் மோடி அரசு மீண்டும் ஆட்சியை தக்கவைத்ததை கண்டு
கூட்டணி கட்சியான அதிமுக மத்தியில் மந்திரி பதவி வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறது. இதில் ஓபிஎஸ் எப்படியும் தனது மகனுக்கு மத்திய மந்திரி பதவி வாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தீவிரமாக இருந்து வருகிறார். அதோடு எடப்பாடியுடன் ஒபிஎஸ்
தனது மகன் ரவீந்திர நாத் குமாரையும் டெல்லிக்கு அழைத்து சென்று மோடியை சந்தித்து ஆசி பெற்றும் வந்து இருக்கிறார்.
கட்சியில் சீனியரும் ராஜ்யசபா உறுப்பினருமான வைத்தியலிங்கமும் மத்திய மந்திரி பதவிக்கு போட்டி போட்டு வருகிறார். இப்படி அதிமுக வில் மத்திய மந்திரி பதவிக்காக பெரும் போராட்டமே நடந்து வருகிறது. ரவீந்திரநாத் குமாருக்கு கப்பல் அல்லது ரயில்வே இணை அமைச்சர் பதவி கிடைக்க போகிறது என்ற பேச்சும் பரவலாக எதிர் ஒலித்தும் வருகிறது.
இந்த சூழ்நிலையில் தேனியில் உள்ள ரவீந்திரநாத் குமாரின் ஆதரவாளரான 22 வது வார்டு செயலாளரான பொன்ஸ், திடீரென எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் படங்களுடன் கட்சி பொறுப்பாளர்கள் படத்துடன் ரவீந்திரநாத் குமார் படத்தையும் பெரிதாக போட்டு "எங்கள் மத்திய அமைச்சரே'' என போட்டு பெரிய சைசில் போஸ்டர் அடித்து தேனி நகரம் மற்றும் மாவட்ட அளவில் ஒட்டி விட்டார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ரவி எம்.பி.ஆவதற்க்கு முன்பே எம்.பி. ஆகிவிட்டார் என கல் வெட்டு வைத்து பிரச்சனையானது. அதன் பின் தற்பொழுது மத்திய மந்திரி பதவி கிடைக்குமோ? கிடைக்காதோ? என்று தெரியவில்லை. அதற்குள் ஓபிஎஸ் மகன் ஆதரவாளர்கள் ஆட்டம் போட ஆரம்பித்ததை கண்டு தேனி மக்களே மனம் நொந்து போய் வருகிறார்கள்.