Skip to main content

ஓபிஆர் கார் கண்ணாடி உடைப்பு.! போடி தொகுதியில் பரபரப்பு!!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

O.P.R. Car glass break.


தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரில், அ.தி.மு.க சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், தி.மு.க சார்பில் தங்கத் தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது போலவே, இன்று மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்த ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்தனர். 

 

பெரியகுளத்தில் உள்ள தனியார்ப் பள்ளியில் ஓ.பன்னீர்செல்வம், வாக்களித்தார். அவருடன் தாயார் பழனியம்மாள், மனைவி விஜயலெட்சுமி, மகன் ஜெயபிரதீப், அவரது மனைவி ஆர்த்தி, தேனி எம்.பி ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி ஆகியோர் வந்து வாக்களித்தனர். இந்நிலையில், ரவீந்திரநாத் மட்டும் தனியாக வந்து அதே வாக்குச் சாவடியில் வாக்களித்துவிட்டு, பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிக்குச் சென்று, கட்சியினரிடம் ஆலோசனை செய்தார்.

 

தொடர்ந்து போடி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு வரிசையாகச் சென்ற அவர், கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். அந்த வகையில், போடி அருகே உள்ள பெருமாள் கவுண்டன்பட்டிக்குச் சென்ற ரவீந்திரநாத்தின் கார் மீது சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அவரது கார் கண்ணாடி உடைந்தது. அதனைக் கண்ட அ.தி.மு.க'வினர், கல்வீச்சில் ஈடுபட்ட நபர்களை துரத்தியடித்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ரவிந்திரநாத் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார். 

 

காரில் ரவீந்திரநாத் இல்லாததால், அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. யார் கல்வீச்சில் ஈடுபட்டது என விசாரித்தோம். "அ.ம.மு.க'வினர் சிலர் தான் இந்த கல்வீச்சு தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். எல்லோரும் ஒரே கட்சியில் இருந்து, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது பிரிந்து வெவ்வேறு கட்சியாக இருக்கிறார்கள். அதனால், அ.தி.மு.க'வினரால் எதுவும் செய்யமுடியவில்லை. கல்வீச்சில் ஈடுபட்டவர்களை விரட்ட மட்டுமே செய்யதனர்" என்றனர் பெருமாள் கவுண்டன்பட்டி வாசிகள்.

 

இதுதொடர்பாக போடி தி.மு.க வேட்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, “ரவீந்திரநாத்தின் பாதுகாவலர்களுக்கும், அ.ம.மு.க'வினருக்கும் இடையே தான் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அங்கிருந்த தி.மு.க நிர்வாகிகள் சமாதானம் செய்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்திற்கும் தி.மு.க'விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தவறான செய்தி வருகிறது. யாரும் நம்ப வேண்டாம்” என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்