அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இன்று (10/06/2022) மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தைச் சந்தித்து ஆசி பெற்றார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கியது அ.தி.மு.க. அரசு. அ.தி.மு.க. ஆட்சியில் டெல்டா பாசன விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்தது. டெல்டா பாசன விவசாயிகளுக்கு வெள்ள காலங்களிலும், வறட்சிக் காலங்களிலும் நிவாரணமும், இழப்பீடும் வழங்கியது அ.தி.மு.க. அரசு. இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிகளவு இழப்பீட்டுத் தொகை வழங்கிய அரசு அ.தி.மு.க. அரசு.
50 ஆண்டுகளாக தீர்க்க முடியாத காவிரி நதிநீர் பிரச்சனையைத் தீர்த்து வைத்ததும் அ.தி.மு.க. அரசுதான். தமிழ்நாட்டு மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் குறித்து தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்திட்டது தி.மு.க. அரசு; அதனை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அ.தி.மு.க. அரசு.
எந்த மத விவகாரத்திலும் அரசு தலையிடக் கூடாது. ஆதீன விவகாரங்களில் அரசு மூக்கை நுழைக்க முயற்சி செய்கிறது. சசிகலாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை" எனத் தெரிவித்தார்.