Skip to main content

இளைஞர்களின் முயற்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்! 

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

 

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்று கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் நிலத்தடி நீலை மீட்டெடுக்கும் முயற்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீர்நிலைகளை சீரமைக்கும் முயற்சியில் இளைஞர்கள் களமிறங்கியதால் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. தஞ்சை மாவட்டம் களத்தூர் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீர் 300 அடிக்கு கீழே போனதால் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இன்றி விவசாயம் பொய்க்கத் தொடங்கியது.

அதனால் உள்ளூர் இளைஞர்கள் நீர்நிலையை மீட்டெடுக்கும் முயற்சியாக உயிர்த்துளி என்ற அமைப்பை உருவாக்கி உள்ளூர் வெளியூர் வெளிநாட்டில் உள்ள இளைஞர்களின் பங்களிப்போடு காடன் குளத்தை தூர்வார மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை என்று பலமுறை மனு கொடுத்தும் பலனில்லாததால் உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு சென்று உத்தரவு பெற்றும் அதிகாரிகள் ஆக்கிமிப்புகளை அகற்றிக் கொடுக்கவில்லை.

அதனால் கடந்த ஆண்டு  இளைஞர்களே குளங்களை தூர்வாரி 18 கி.மீ வரத்து வாய்க்கால்களையும் மீட்டு குளங்களில் தண்ணீரை நிரப்பியதால் நிலத்தடி நீர்மட்டம் 60 அடிக்கு உயர்ந்தது. அதனால் நிறுத்தப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மீண்டும் இயங்கத் தொடங்கியது. இந்தநிலையில்தான் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று  மீண்டும் உயிர்துளி அமைப்பினர் மீண்டும் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று வந்தனர்.

நீதிமன்ற உத்தரவையடுத்து இன்றுாகளத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய குளமான காடான் குளம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியுள்ளது. 3 ல் 2 பங்கு ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டிருந்தது. நிலம் அளவீடு செய்யும்போது விவசாயிகள் எதிர்ப்புகள் இன்றி வெளியேறியதுடன் தண்ணீர் இருந்தால்தான் விவசாயம் அதனால் நீர்நிலை இடத்தை விட்டு வெளியேறுகிறோம் என்றனர்.

பலத்த போலிஸ் பாதுகாப்போடு ஆக்கிரமிப்பு அகற்றி வருகின்றனர். இதேபோல இளைஞர்களால் தூர்வாரப்படும் நீர்நிலைகளுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்புக் கொடுத்தால் இளைஞர்கள் சொந்த செலவிலேயே நீர்நிலைகளை மீட்டு நிலத்தடி நீரை பாதுகாப்பார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்