சேலம் அருகே, அதிமுக மாவட்ட பிரதிநிதியை மர்ம கும்பல் சுற்றி வளைத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் தும்பலைச் சேர்ந்தவர் உமாபதி (57). அந்தப் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அமுதா. இவர்களுடைய ஒரே மகன் பி.இ., முடித்துவிட்டு, தற்போது துபாயில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 1, 2018) இரவு 9.30 மணியளவில் உமாபதி கடையில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அவரை ஒரு கும்பல் வழிமறித்து இரும்பு ராடு மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் அவருடைய தலை, கன்னம் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் உமாபதியை மீட்டு சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் அவருடைய வலது பக்க கன்ன எலும்புகள் உடைந்துள்ளன.
இதுகுறித்து நாம் விசாரித்தோம். காயம் அடைந்த உமாபதி, அதிமுகவில் மாவட்ட பிரதிநிதி பொறுப்பில் இருக்கிறார். அதற்கு முன்பாக வார்டு செயலாளர், பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத்தலைவர் ஆகிய பொறுப்புகளிலும் இருந்துள்ளார். இவருடைய தம்பி உதயகுமார், வாழப்பாடி சப்டிவிஷனில் குற்றப்பிரிவு எஸ்ஐ ஆக உள்ளார்.
உமாபதியின் பழக்கடைக்கு அருகில் கார்த்திக் என்பவர் பெயிண்ட் கடை வைத்துள்ளார். அந்தக் கடைக்கு பெயிண்ட் லோடு கொண்டு வரும் வாகனங்களை உமாபதியின் கடை வாசலிலேயே நிறுத்தி, பெயிண்ட் சரக்குகளை இறக்குவார்களாம். பெயிண்ட் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலரும் உமாபதியின் கடை வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்வதாக கூறப்படுகிறது. தன் கடை வாசலில் யாரும் வாகனங்களை நிறுத்தக்கூடாது என மூன்று மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கிடம் உமாபதி சத்தம் போட்டுள்ளார். இது தொடர்பாக இருதரப்புக்கும் அடிக்கடி வாய்த்தகராறு இருந்து வந்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, உமாபதி தனது பழக்கடைக்குள் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக துபாயில் இருக்கும் அவருடைய மகனுக்கு செல்போன் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு உள்ளது. விசாரணையில், பக்கத்து கடைக்காரரான கார்த்திக்தான் புதிய சிம் கார்டு மூலம் அந்த எஸ்எம்எஸ்ஸை அனுப்பி இருப்பது தெரிய வந்தது.
மேலும் விவகாரம் முற்றிய நிலையில், அதிமுக ஜெயலலிதா பேரவையின் மாவட்ட செயலாளரான இளங்கோவனிடம் உதவிக்குச் சென்றிருக்கிறார் உமாபதி. அவருடைய தலையீட்டின்பேரில் உமாபதி, கார்த்திக் ஆகியோரை அழைத்துப் பேசிய ஏத்தாப்பூர் போலீசார், இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில்தான் உமாபதியை நேற்று முன்தினம் இரவு 5 பேர் கொண்ட கும்பல் இரும்பு கம்பியால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதுகுறித்து சிகிச்சையில் இருக்கும் உமாபதியிடம் கேட்டபோது, ''நேற்று முன்தினம் இரவே என்னை மர்ம நபர்கள் இரண்டு பேர் பின்தொடர்ந்தனர். அவர்களிடம் சிக்காமல் வீட்டுக்குள் சென்று விட்டேன். மறுபடியும் நேற்று இரவு 5 பேர் என்னை சுற்றி வளைத்து தாக்கினர். அப்போது சம்பவ இடத்தில் கார்த்திக்கும் இருந்தார். அவர்தான் அவர்களிடம், 'அடிங்கடா... கொல்லுங்கடா...' என்றார்.
ஒரே ஊர்க்காரர் என்பதால் கார்த்திக் மீது எப்ஐஆர் கூட போடாமல் பேசி சமாதானம் செய்து கொண்டோம். 45 வருஷமா அந்தப் பகுதியில் லாட்டரி கடை, அதன்பிறகு பழக்கடைனு வெச்சிட்டு இருக்கேன். யாரிடமும் எந்த வம்புக்கும் போனதில்ல. இப்போது என்னை கார்த்திக் ஆள்வைத்து தாக்கிவிட்டார்,'' என்றார்.
இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.