ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த கூடாது என திருவாரூருக்கு வந்திருந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம், பி.ஆர்.பாண்டியன் புகார் மனு அளித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பொது மக்கள், தொண்டு நிறுவனர்கள் அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் மனுக்களை பெற்றார். அப்போது தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் மனு அளித்து விட்டு வெளியில் வந்தவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
"மத்திய அரசு தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எடுக்க அனுமதி வழங்கியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. மத்திய அரசும் ஓஎன்ஜிசியும் நீதிமன்றத்திடம் கொடுத்த வாக்குறுதியை மீறுகிறது. இதனால்விவசாயிகள் இடபெயரவேண்டிய நிலையும் விவசாயத்தை அழிக்கும் செயலாகும் என்பதை அறிந்து மத்திய அரசு பிரதிநிதியாக திருவாரூர் வருகை தரும் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டுவது என முடிவு செய்திருந்தோம்.
ஆனால் அவரை சந்தித்து குறைகளை தெரிவிக்க வாய்ப்பு கிடைத்ததையடுத்து போராட்டத்தை ஒத்திவைத்து இன்று அவரை விவசாய பிரதிநிதிகளுடன் சந்தித்தோம்.
தமிழக கவர்னரிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம், விவசாயிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிப்படைவார்கள் எனவே இத்திட்டத்தை திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த கூடாது என வலியுறுத்தி உள்ளோம். எங்களின் கருத்தை மத்திய அரசிற்கு தெரிவித்ததாக கூறியுள்ளார். அவரிடம் பிரதமருக்கான கடித்தையும் வழங்கினோம் என தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்தவொரு அனுமதியும் கொடுக்க கூடாது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி பெற்ற வேதாந்தா நிறுவனம் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்ககும் வகையில் ஆயிரம் அடியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தருவதாக கூறி ஆய்வு மேற்கொள்ள முயன்று வருகிறது. அதனையும் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். விவசாயிகளின் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எந்தவொரு நிறுவனத்தையும் தமிழகத்தில் காலடி வைக்க விடமாட்டோம்" என்றார்.