தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்று (07/02/2022) பிற்பகல் 03.00 மணியுடன் நிறைவுப் பெற்றது. இதையடுத்து, இன்று (07/02/2022) மாலை இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறது மாநில தேர்தல் ஆணையம். அதைத் தொடர்ந்து, சின்னம் ஒதுக்கும் பணி நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 74,416 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 12,838 வார்டுகளுக்கு வரும் பிப்ரவரி 19- ஆம் தேதி அன்று தேர்தல் நடத்தப்பட்டு, பிப்ரவரி 22- ஆம் தேதி அன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதனிடையே, சில வார்டுகளில் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் 11 உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போட்டியின்றித் தேர்வாகியுள்ள 11 உறுப்பினர்களில் 10 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர். ஒருவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.