தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாகக் கடந்த வாரம் நடைபெற்றது. ஒரு லட்சம் பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் 75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (12.10.2021) காலை முதல் எண்ணப்பட்டுவருகிறது.
இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, 140 மாவட்ட கவுன்சிலர்களில் திமுக 139 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளது. 1,381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 989 இடங்களிலும், அதிமுக 199 இடங்களிலும் முன்னணியில் இருந்துவருகிறது. பாமக 34 இடங்களிலும், அமமுக 5 இடங்களிலும், தேமுதிக ஒரு இடத்திலும், பிற கட்சிகள் 91 இடங்களிலும் முன்னணியில் இருந்துவருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட, ஒன்றிய தலைவர் பதவிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறது திமுக அரசு என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மகத்தான வெற்றி என செய்தி வருவது ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று. திமுக செய்த சாதனைகளுக்கு மக்களின் அங்கீகாரமாகவும் வெற்றி அமைந்துள்ளது. மருத்துவ நெருக்கடி, பொருளாதார நெருக்கடி என இக்கட்டான காலத்தில் திமுக அரசு அமைந்துள்ளது. 5 ஆண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை 5 மாதங்களில் பெற்ற பெருமித உணர்வை அடைகிறேன். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் மக்களுக்காக உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.