கரோனோ வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகளானது தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் பேரணாம்பட்டு பகுதியில் தோல் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. தோல் பொது சுத்திகரிப்பு மையமானது தோல் தொழிற்சாலைகளிடமிருந்து தோல் கழிவுநீரை வாங்காமல் நிறுத்தி வைத்தது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு பகுதியில் அரசின் 144 தடை உத்தரவை பின்பற்றாமல் ஒரு சில தோல் தொழிற்சாலைகள் மட்டும் தொழிலாளர்கள் வைத்து இயக்கப்பட்டுவருவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து தொழிலாளர் நலத்துறைக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் தகவல் சென்றது. அவர்கள் இதனை கண்காணிப்பது எங்கள் வேலையில்லை என தட்டிக்கழித்துள்ளனர். அதன்பின்னர் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் அனுப்பியுள்ளனர்.
கடந்த மார்ச் 28ந் தேதி அன்று பேரணாம்பட்டு பகுதியில், தாசில்தார் முருகன் தலைமையில் அதிகாரிகள் தோல் தொழிற்சாலைகளை ஆய்வு செய்தபோது ஒரு தோல் தொழிற்சாலை தொழிலாளர்களை வைத்து தோல் பதனிடப்பட்டது தெரிய வந்தது. அந்த நிறுவனத்துக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் பணியை நிறுத்தியது அந்த நிறுவனம்.
அந்த நிறுவனம் தோல் தொழிற்சாலையின் தோல் கழிவுநீரை கடந்த சில தினங்களாக சுத்திகரிக்காமல் அப்படியே திறந்து வெளியேற்றியதால் அந்த நிறுவனம் அமைந்துள்ள சாலைப்பேட்டை பகுதியில் அந்த கெமிக்கல் கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசியது. அதோடு பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதுப்பற்றி மீண்டும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கவனத்துக் கொண்டு சென்றனர். மீண்டும் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து சுற்றுசூழல் மாசு கட்டுப்பாடு உதவி பொறியாளர் நித்தியலட்சுமி தலைமையில், தாசில்தார் முருகன் உள்பட அதிகாரிகள் தோல் தொழிற்சாலைக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர். ஆய்வில் தோல் தொழிற்சாலையிலிருந்து கழிவு நீர் சுத்திகரிக்காமல் வெளியேற்றியது தெரிய வந்ததது. இதனையடுத்து அங்குள்ள மொத்தம் 16 இயந்திரங்களுக்கு சுற்றுசூழல் மாசு கட்டுப்பாடு உதவி பொறியாளர் நித்ய லட்சுமி, தாசில்தார் முருகன் ஆகியோர் சீல் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.