வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்தது. தற்போதைய நிலவரப்படி தீவிரப்புயலாக இருந்த 'மாண்டஸ்' புயலாக வலுவிழந்து நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து தென்கிழக்கில் 220 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு மக்கள் வருவதை தவிர்க்கும்படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மரங்களின் அருகில் இருக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்மழை காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து முதற்கட்டமாக 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது ஏரியின் நீர்மட்டம் 20.37 அடியாக உள்ளது. இதனால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் புழல் ஏரியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.