ஆந்திரப் பிரதேச மாநிலம், அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சனேயா பிரசாத். இவருடைய மனைவி சந்திரலேகா. இந்த தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறார். ஆஞ்சனேயாவும் சந்திரலேகாவும் புலம்பெயர்ந்த தொழிலாளிகளாக குவைத்தில் வேலை பார்த்து வருகின்றனர். அதனால், தங்களது மகளை, சந்திரலேகாவின் சகோதரி லட்சுமி மற்றும் அவரது கணவர் வெங்கடரமணா வீட்டில் தங்க வைத்துள்ளனர்.
இந்த நிலையில், லட்சுமி வீட்டில் இருந்த ஆஞ்சனேயாவின் மகளை, வெங்கடரமணாவின் தந்தை குட்டா ஆஞ்சனேயலு(59) பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமைகளை, குவைத்தில் வேலைப் பார்க்கும் தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், ஒபுலவாரிப்பள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார், ஆஞ்சனேயலுவுக்கு எச்சரிக்கை மட்டும் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதில், மனமுடைந்த ஆஞ்சனேயா பிரசாத், கடந்த 7ஆம் தேதி குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்து சிறிது நேரத்திலே குவைத்துக்குச் சென்றார். இதற்கிடையில், ஆஞ்சனேயலு வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த சம்பவத்தை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
குவைத்துக்குச் சென்ற ஆஞ்சனேயா பிரசாத், தனது மகளின் பாதுகாப்பிற்காக ஆஞ்சனேயலுவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடையவுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, பிரசாத்தின் வாக்குமூலத்தை வைத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.