தமிழ்நாடு அரசின் சார்பில், திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதரின் 175வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் நினைவாக 2 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாசப் பண்டிதருக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (01.12.2023) காலை 10.30 மணியளவில் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, ஏ.வ. வேலு, திராவிடர் கழகத் தலைவர் கி.விரமனி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை எனப் பலரும் கலந்து கொண்டனர்.
திராவிடப் பேரொளி அயோத்திதாசர் 1845 ஆம் ஆண்டு மே 20 ஆம் நாள் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள தேனாம்பேட்டை ஆயிரம் விளக்கு பகுதியில் பிறந்தவர். இவர் தமிழ், ஆங்கிலம், பாலி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றறிந்தார். சித்த மருத்துவம் பயின்று, சிறந்த சித்த மருத்துவராக விளங்கினார். தனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர் வல்லக்காலத்தி அயோத்திதாசர் எனும் தனது ஆசிரியர் பெயரைத் தன் பெயராகவே மாற்றிக் கொண்டார். இவர் சிறந்த எழுத்தாளர், ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர், பதிப்பாளர், மருத்துவர், பேச்சாளர், மொழியியல் வல்லுநர், பன்மொழிப் புலவர் என்ற பன்முக ஆற்றலைப் பெற்றிருந்தார்.
அயோத்திதாசப் பண்டிதர் ஏற்றத்தாழ்வு மிக்க சமூகங்களைக் கண்டு வெகுண்டெழுந்து சமூக சீர்திருத்தப் பாதையில் தனது பயணத்தைத் தொடங்கி சாதி ஒழிப்பையும், சமூக விடுதலையையும் தனது லட்சியமாகக் கொண்டிருந்தார். தந்தை பெரியார், அயோத்திதாசப் பண்டிதரை பற்றி குறிப்பிடும்போது. "என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி" என்று கூறினார். அயோத்திதாசர் சாதி, மத வேறுபாடுகளை நீக்கி தமிழன் என்ற உணர்வு அனைவரிடத்திலும் இருக்க வேண்டுமென்றார். ஒரு பைசா தமிழன், திராவிடப் பாண்டியன் போன்ற இதழ்களை நடத்தி வந்தார். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற சமயங்களில், சமூகம் சாதியால் பிளவுற்று இருந்தபோது இந்தியாவின் விடுதலை முதலில் ஏற்றத்தாழ்விலிருந்து கிடைக்க வேண்டுமென்று கூறினார்.
சாதியால், மதத்தால், இனத்தால், நிறத்தால் உலகம் மாறுபட்டு தள்ளப்பட்டபோது உரிமைக் குரல் கொடுத்த நல்லோர்கள் வரிசையில் அயோத்திதாசப் பண்டிதரை மக்கள் அனைவரும் தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை எனப் போற்றி புகழ்ந்தனர். 1892 ஆம் ஆண்டு சென்னை மாகாண சங்கம் சார்பில் அரசுக்கு இரண்டு கோரிக்கை வைத்தார். அதில் ஒன்று கல்வி உரிமை, மற்றொன்று நில ஒதுக்கீடு ஆகும். அயோத்திதாசர் தாமே முன்னின்று தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமைக்கு அரும்பாடுபட்டார். தாழ்த்தப்பட்டவருக்கு கல்வி வசதியோடு உதவித் தொகை மற்றும் அரசு வேலையும், உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி வெற்றி கண்டார் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.