2023 - 2024ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் கடந்த 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 21ம் தேதி தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
ஆளுநருக்கு முன்பு அனுப்பப்பட்டிருந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்யும் மசோதாவை ஆளுநர் நிராகரித்தது மற்றும் நிராகரித்ததற்கான ஆவணம் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி இடப்பட்ட கடிதத்தை தமிழக அரசுக்கு ஆளுநர் அனுப்பி இருக்கிறார். அதில், 'பந்தயம், சூதாட்டம் ஆகிய விளையாட்டுக்கள் மீது மட்டுமே மாநில அரசுகளால் சட்டம் இயற்ற முடியும். திறன்களை வளர்க்கக்கூடிய சில விஷயங்கள் இருக்கிறது எனவே ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய முடியாது. இதுபோன்ற சட்டத்தை இயற்றும் அதிகாரம் மாநில சட்டப் பேரவைக்கு இல்லை. திறன் சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகள் மத்திய அரசின் பட்டியலில் இருப்பதாக சட்ட ஆணையம் தெரிவித்திருக்கிறது. பெட்டிங் உள்ளிட்ட அதிர்ஷ்டத்தால் வெல்லக்கூடிய விளையாட்டுகள் மட்டுமே மாநில பட்டியலில் 34வது பிரிவில் இருகிறது.’ என ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் நேற்று சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா இன்று முறைப்படி தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று டெல்லி சென்றிருந்த தமிழக ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.