'பிரியாணி மேன்' என்கிற பெயரில் ரபி என்பவர் யூடியூப் தளத்தில் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும் அதேபோல பிரபல யூடியூப்ராக உள்ள இர்ஃபானுக்கும் இடையே அடிக்கடி விமர்சனங்கள் எழுந்து வந்தது. கடந்த ஆண்டு இர்ஃபானின் உறவினர் பயணித்த கார் விபத்துக்குள்ளாகி முதிய பெண் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அந்த காரில் இர்ஃபானும் இருந்ததாக யூடியூபர் ரபி குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதேபோல் மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை இர்ஃபான் அறிவித்ததையும் விமர்சனம் செய்து பிரியாணி மேன் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அதனைத் தொடர்ந்து அதற்கு பதிலளிக்கும் வகையில் பல்வேறு விமர்சனங்களை வைத்து இர்ஃபானும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த ஆன்லைன் சண்டை முற்றிய நிலையில் ஆன்லைன் லைவ் வீடியோவில் பேசிக் கொண்டிருந்த பிரியாணி மேன் ரபி தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், ஜேசன் என்பவர்தான் தன்னுடைய இந்த முடிவுக்கு காரணம் என்றும் சொல்லிவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக ரபியின் தாயார் லைவ் சென்று கொண்டிருந்த அறைக்கு உள்ளே வந்து ரபியை காப்பாற்றினார். ஒருபுறம் இது சொல்லி வைத்து செய்து கொண்ட செட்டப் என்றும் சமூக வலைத்தளங்களில் புகைச்சல்கள் வெளியானது. இந்நிலையில் பெண் ஒருவர் கொடுத்த புகார் அடிப்படையில் சென்னை குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பிரியாணி மேனை கைது செய்துள்ளனர்.