நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்கிற விவாதம் சமீப நாட்களாக றெக்கை கட்டிப்பறக்க, வரமாட்டார் என்பது போன்ற பேச்சுகளே அவரது ரசிகர்கள், அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எதிரொலிக்கிறது.
இந்தச் சூழலில் நாகை சுற்றுவட்டாரத்தில், "கஜா புயலால் பாதித்த ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய தலைவா! தமிழக மக்களையும், தமிழகத்தையும் காத்திட வா! தலைவா வா! தலைமை ஏற்க வா!'' என்று போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
அதோடு நின்றிடாமல் கடந்த 2 ஆம் தேதியில் இருந்து நாகை அக்கரைகுளம் பகுதியில், மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் சிலர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும், அவர் நிச்சயம் வருவார், அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் அவரின் கட்சி ஆட்சியைப் பிடிக்கும், இதற்கு எல்லோரும் உறுதுணையாக முன்னின்று பாடுபடுவோம் என்று சூளுரைத்த படியே வீடு வீடாகச் சென்று, தீவிர பிரச்சாரத்தை துவங்கியிருக்கின்றனர். அவர்களின் பிரச்சாரப் பயணம் மற்ற அரசியல் கட்சிகள் மத்தியில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.
இதுகுறித்து, பிரச்சாரத்தில் இருந்த களஞ்சியம், விநாயகம், மதுரைவீரன் உள்ளிட்ட மகளிர் சுய உதவிக் குழுவினரிடமே கேட்டோம், "தமிழகத்தில் தொடரந்து திமுகவும், அதிமுகவுமே ஆட்சியில் இருக்கிறது, அவர்களால் மக்களை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லமுடியவில்லை, அவர்கள் அதற்கான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அவர்களின் ஆட்சியில் எந்தவித முன்னேற்றமும் வளர்ச்சியும் இல்லை. நடிகர் ரஜினிகாந்த் கட்சியைத் தொடங்கி மக்களுக்குச் சேவை செய்வார் என்று நம்புகிறோம். அப்படிக் காத்திருந்த நிலையில், அரசியல் பிரவேசம் வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். எனவே அவர் அரசியலுக்கு வரும்வரை நாங்கள் பிரச்சாரம் செய்வோம்." என்று கூறியபடியே நாகை அக்கரைக்கும், கொத்தத்தெரு, கோட்டை வாசல் படி, உள்ளிட்ட பகுதிகளுக்கும் வீடு வீடாகச் சென்று ரஜினிக்கு வாக்குச் சேகரித்தனர்.
'கஜா' புயல் நேரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், "கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களை எப்போது சந்திப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, "தற்போது கட்சி ஆரம்பிக்கவில்லை, கட்சி ஆரம்பித்தப் பிறகு மக்களைச் சந்திப்பேன்" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.