நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் பா.ம.க., தே.மு.தி.க. அ.தி.மு.க கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இணைவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் தருமபுரி, ஸ்ரீபெரும்புதூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம், ஆரணி ஆகிய 7 மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதியை பாமக கேட்பதாகவும், ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஒதுக்க அ.தி.மு.க தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் தென் மாவட்டங்களில் ஒரு தொகுதியில் ஏதேனும் ஒரு தொகுதியில் பா.ம.க போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை பா.ம.க ஏற்க தயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.