அண்மையில்தான் நெல்லை மாவட்ட எஸ்.பி.யாகப் பொறுப்பேற்றிருக்கிறார் மணிவண்ணன். முன்பு நெல்லை மாநகர டி.சி.யாகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.
பதவியேற்ற நாள் முதல் அதிரடி நடவடிக்கைகளை நேர்மையாகவும் சரவெடியாகவும் எடுத்து வருகிறார். போலீஸ் துறையைச் சார்ந்தவர்களானாலும் சரி, குற்றச் சம்பவங்கள் தொடர்பாக யார் சட்டத்தை மீறினாலும் சரி, விசாரணையை அடுத்து நடவடிக்கைகள் தாமதமில்லாமல் பாய்கின்றன. போலீஸ் துறையைச் சார்ந்தவர்களானால் குற்றம் நிரூபணமானால் உடனே சஸ்பெண்ட் அல்லது ஆயுதப் படைக்கு அனுப்புதல். குற்றச் சம்பவங்களுக்கு ஏற்ப நடவடிக்கைகள் பாரபட்சமின்றிப் பாய்கின்றன.
சட்டத்தை மீறி மணல் கடத்தினால் குண்டர் சட்டம். பொறுப்பிற்கு வந்தவுடன் நாங்கு நேரி தாதுமணல் கடத்தலில் ஈடுபட்ட டிரைவர்கள் மீது இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டது. தொடர்ந்து தன் லிமிட்டில் உள்ள காவல் நிலையங்களுக்கு போலீசார் மணல் கடத்தலுக்குத் துணை போகக் கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை என்று ஏற்கனவே எச்சரித்திருந்தார். ஆனால், அதனை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு மணல் கடத்தலுக்கு உடந்தையான மூலக்கரைப்பட்டி ஏட்டு லட்சுமி நாராயணன், வீரவநல்லூர் காவல் நிலைய எஸ்.ஐ.கார்த்திகேயன் இருவரையும் சஸ்பெண்ட் செய்துவிட்டார் எஸ்.பி.
குற்றங்களைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையின் எஸ்.ஐ.கருத்தையா, குற்றத்தைத் தடுக்காமல் அவருடனிருந்த காவலர்களும் மணல் கடத்தும் மாஃபியாக்களுக்கு துணையாகச் செயல்படும் ரகசிய தகவல் கிடைக்கவே, தீவிர விசாரணைக்குப் பிறகு எஸ்.பி மணிவண்ணன், டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபுவுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
அதன் விளைவு எஸ்.பி. மணிவண்ணன், டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு ஆகியோர் மணல் கடத்தலுக்கு உதவிய எஸ்.ஐ.கருத்தையா, ஏட்டு சுதாகர், காவலர்களான ரத்தினவேல், முண்டசாமி, லட்சுமி நாராயணன் உள்ளிட்ட 5 போலீசாரையும் சஸ்பெண்ட் செய்தனர். எஸ்.பி.யின் இந்த ஸ்பீட் ஃபாஸ்ட் ஆக்ஷன்களால் மாவட்ட காவல் நிலையங்கள் அடிவயறு கலக்கத்தில் உள்ளன.