திருவண்ணாமலை அடுத்த சோ.நம்மியந்தல் கிராமத்தில் விவசாய தொழில் செய்து வருபவர் பச்சையப்பன். இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் மணிலா பயிரிட்டு வருகிறார். இவரது நிலத்திற்கு அருகாமையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்றும் உள்ளது. இந்த ஏரியில் பச்சையப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து திருட்டுத்தனமாக மீன்பிடித்து அதனை வெளியே விற்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
ஜூலை 1 ஆம் தேதி காலை பச்சையப்பன் தனது மகன் தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது நண்பர் வருவான் வடிவேலனை அழைத்துக் கொண்டு பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரியில் உள்ள மீன்களைப் பிடிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த செல்லக்குட்டி என்ற எலக்ட்ரீசியனை வேலைக்காக அழைத்துக் கொண்டு டிராக்டர் உதவியுடன் தனது நிலத்தில் இருந்து ஏரிக்கு பைப்பு விட்டு, மோட்டார் மூலமாக ஏரியிலிருந்து நீரை உறிஞ்சும் வேலையை செய்துள்ளனர்.
அப்போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் செல்லக்குட்டி தூக்கி வீசப்பட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பச்சையப்பனும் அவரது மகனும் உடனடியாக எலக்ட்ரீசியன் செல்லக்குட்டியை தூக்கிக்கொண்டு மருத்துவமனை செல்லும் பொழுது அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரியிலிருந்து கள்ளத்தனமாக மீன் பிடித்து விற்பனை செய்ய, வேலைக்காக சென்ற எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிர் இழந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து புகார் ஏதும் அளிக்கப்படாததால் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அதே நேரத்தில் காவல்துறையினர், கட்டப்பஞ்சாயத்தினர் இணைந்து திருட்டு மீன் பிடித்து ஒருவர் இறக்க காரணமாக இருந்தவர்களிடம் லட்சத்தில் பேரம் பேசி பணம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத மீன் பிடித்தபோது ஒருவர் இறந்துள்ளார். இதுகுறித்து அந்த கிராம நிர்வாக அலுவலர் புகார் தந்திருக்க வேண்டும், அந்த கிராமத்துக்கான காவல்துறை அலுவலர் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லியிருக்க வேண்டும், கிராமப் பஞ்சாயத்து செயலாளர், பொதுப்பணித்துறை அலுவலருக்கு தகவல் சொல்லியிருக்கவேண்டும். அப்படி எதுவுமே செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.