கட்டுமான பணியின்போது நிகழ்ந்த விபத்தால் இடிபாடுகளில் சிக்கி வடமாநிலத் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தாம்பரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரத்திற்கு அருகே வேளச்சேரி சாலையில் அமைந்துள்ளது சேலையூர் வட்டம். இந்த பகுதியில் உள்ள கர்ணம் தெருவைச் சேர்ந்தவர் லஷ்மி. 60 வயதான இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக இரண்டடுக்கு மாடி வீடு உள்ளது.
இந்நிலையில், அந்த வீட்டில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக கடந்த சில நாட்களாக கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கட்டுமான பணியில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 11 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில், அந்த இரண்டடுக்கு வீட்டை ஜாக்கி இயந்திரம் மூலம் உயர்த்திக் கொண்டிருந்தபோது, திடீரென அதன் ஒருபக்கத்தில் சீலிங் சரிந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், என்ன செய்வது தெரியாமல் திகைத்திருந்த நேரத்தில் 3 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
மேலும், அந்த வீடு திடீரென சரிந்து விழுந்ததால் அப்பகுதி முழுவதும் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறிப்போன அக்கம்பக்கத்தினர், உடனடியாக தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்காக பல மணி நேரமாகப் போராடியுள்ளனர். நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு, கட்டடத்திற்குள் சிக்கிய மூன்று தொழிலாளர்களையும் மீட்டெடுத்தனர்.
அப்போது, அந்த மூன்று பேரில் பேஸ்கார் என்ற 28 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. மீதமுள்ள இரண்டு பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சேலையூர் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம், கட்டுமான பணியில் இருந்த கூலித் தொழிலாளர்கள் முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் அணியவில்லை என கூறப்படுகிறது.