விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ளது சாரம் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து ஈச்சேரி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அந்த டாஸ்மாக் கடையில் விற்பனை முடித்தபின்னர், சூப்பர்-வைசர் திருநாவுக்கரசு, விற்பனையாளர் பழனிவேல், உதவியாளர் தாஸ் ஆகிய மூவரும் கடையைப் பூட்டிவிட்டு தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை தாஸ், கடை திறக்கவந்து பார்த்தபோது டாஸ்மாக் கடையின் பக்கவாட்டு சுவரில் பெரிய துளையிட்டு உள்ளே புகுந்து மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உதவியாளரான தாஸ் உடனடியாக சூப்பரண்டுக்கும் விற்பனையாளருக்கும் தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் ஒலக்கூர் காவல் நிலையத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த திண்டிவனம் டி.எஸ்.பி கணேசன் மற்றும் ஆய்வாளர் மூர்த்தி, உதவி ஆய்வாளர் செந்தில்குமார், தனிப் பிரிவு காவலர் கோவிந்தராஜ் மற்றும் சக போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முருகன், ஆடிட்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து திருடுபோன டாஸ்மாக் கடையைப் பார்வையிட்டு விற்பனை மற்றும் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். ஆய்விற்குப் பிறகு, களவாடப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் இருக்கும் என்றும் 672 மதுபாட்டில்கள் திருடு போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சூப்பர்-வைசர் திருநாவுக்கரசு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுவரில் துளையிட்டு மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர். முன்பு, பெரிய பெரிய வசதி படைத்தவர்களின் வீடுகளின் சுவரில் துளையிட்டு நகை பணம் போன்றவற்றை கொள்ளையடித்துச் செல்வார்கள். கொள்ளையர்கள் தற்போது மாநிலத்தில் பல ஊர்களில் உள்ள டாஸ்மார்க் கடைகளின் சுவர்களில் துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர். பணம் நகையை விட மது பாட்டில்களுக்கு நாட்டில் மதிப்பு அதிகரித்துவிட்டதோ? என்ன கொடுமை இது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.