குளிர்சாதன பெட்டியை ஆட்டோ ஓட்டுநர் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்த முயன்ற சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் வாணியம்பாடி சிஎல் சாலையில் இயங்கி வரும் (DEE GEE SHOWROOM) பிரபல தனியார் ஷோரூமில் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு 2 வருட வாரண்டியுடன் ஒரு குளிர்சாதன பெட்டி வாங்கியுள்ளார். அதன் பின்னர் அந்த குளிர்சாதன பெட்டியில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து 4 முறை சர்வீஸ் சென்டரில் இருந்து வந்து சரி செய்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் அந்த குளிர்சாதன பெட்டியில் கோளாறு ஏற்பட்டதாக கூறி இன்று அந்த குளிர்சாதன பெட்டியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அந்த கடைக்கு சென்றுள்ளார். அங்கு இந்த குளிர்சாதன பெட்டி சரியில்லை 2 ஆண்டுகள் கேரண்டி கொடுத்துவிட்டு ஒரு வருடத்தில் 4 முறை சர்வீஸ் செய்துள்ளீர்கள். என் மனைவி தாலியை விற்று இந்த குளிர்சாதன பெட்டியை வாங்கியுள்ளேன் என்றும், இந்த குளிர்சாதன பெட்டி சரி இல்லை வேறு ஒன்றை மாற்றிக் கொடுங்கள் என்று கேட்டு கடும் வாக்குவாதம் செய்தார்.
ஷோரூம் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே அந்த ஆட்டோ ஓட்டுநர் கடை முன்பு குளிர்சாதன பெட்டியை பெட்ரோல் ஊற்றி கொழுத்த முயன்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் அந்த குளிர்சாதன பெட்டியை அங்கிருந்து அப்புறப்படுத்தி சாலையில் கொண்டு சென்று வைத்தனர். பின்னர் இந்த குளிர்சாதன பெட்டி இங்கேயே வைத்து செல்லுங்கள் இதில் என்ன பிரச்சினை என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி ஆட்டோ ஓட்டுநரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதனால் வாணியம்பாடி முக்கிய சாலையான சி.எல் சாலையில் உள்ள ஷோரூம் அருகில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.