Skip to main content

ஓணம் திருநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி

Published on 04/09/2017 | Edited on 04/09/2017

ஓணம் திருநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஓணம் திருநாள் வாழ்த்து செய்தி:
 
’’கேரள மாநில மக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை எழுச்சியுடன் கொண்டாடும், தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகளைத் தலைவர் கலைஞர் அவர்கள் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மத வேறுபாடின்றி கேரள மக்களால் கொண்டாடப்படும் இந்த ஓணம் திருநாள் சமத்துவத்திற்கும், சகோதரத்துவத்திற்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
 
கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்று ஓணம் பண்டிகையை அம்மாநில மக்கள் அழைத்து, உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடும் இந்த விழாவிற்கு எண்ணற்ற பெருமைகள் உண்டு. ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் முதல் நாளன்று, கேரளாவில் பூக்கள் பூத்துக் குலுங்கும் “அத்தப்பூ” பூக்கோலம் போட்டு வீரம், தீரம், ஈரம் மிகுந்த "மகாபலி" சக்ரவர்த்தியை கேரள மக்கள் மனமுவந்து மகிழ்ச்சி பொங்க வரவேற்கும் நாளாகத் துவங்கி, அடுத்தடுத்த நாட்களில் ஒருவருக்கொருவர் பரிசளித்துக் கொள்ளுதல், உணவு பரிமாறிக் கொள்ளுதல், இளைஞர்கள் மத்தியில் வஞ்சிப்பாட்டு இசைத்து, பாரம்பரியப் படகுப்போட்டி நடத்துதல் என தொடர்ந்து நடைபெற்று, பத்தாவது நாளில் திருவோணம் என்ற எழுச்சிமிகு கொண்டாடட்டத்துடன் ஓணம் திருவிழா நிறைவு பெறுகிறது.
 
தமிழகத்தில் வாழும் கேரள மக்களின் உணர்வுகளை மதிக்கும் பொருட்டு, ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக நாகர்கோவில், கோவை, நீலகிரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பு விடுமுறை அளித்து 2006-ஆம் ஆண்டே உத்தரவு பிறப்பித்தவர் தலைவர் கலைஞர் என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன். அன்புக்கும், கொடைக்கும் அடையாளமான ஓணம் திருநாளை கொண்டாடும், திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும் கேரள மக்கள், எல்லா வளமும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த ஓணம் திருநாளன்று வாழ்த்துகிறேன்.’’

சார்ந்த செய்திகள்