திருச்சியில் நடைபெற்று வரும் நலத்திட்ட விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வின் மேடையில் பேசிய முதல்வர், “உதயநிதி எம்.எல்.ஏ. ஆனபோது எழுந்த விமர்சனங்களுக்கு, தனது செயல்பாட்டால் பதிலடி தந்தார். அதேபோல் அமைச்சரானதற்கு வந்துள்ள விமர்சனங்களுக்கும் செயல்பாட்டால் உதயநிதி பதில் தருவார். அமைச்சர் உதயநிதிக்கு முக்கியமான துறைகள் வழங்கப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையை உதயநிதி மேம்படுத்துவார் என நம்புகிறேன். பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லை. உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு உதவித்தொகை போன்ற திட்டங்களை திமுக அரசு செய்துள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் வாழ்க்கை நிலை மேம்பாடு அடைந்துள்ளது.
திருச்சியில் பல்வேறு வசதிகளுடன் ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரே ஆண்டில் ஒரு கோடி பேர் பயனடைந்துள்ளனர். இது தொடக்கம் தான். இதுபோன்ற திட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். தமிழர்களையும் தமிழ்நாட்டையும் செழிக்க வைப்பதே திராவிட மாடல் ஆட்சியினுடைய நோக்கம். யார் எத்தகைய விமர்சனங்களை வைத்தாலும் திராவிட மாடல் கொள்கையில் இருந்து வழுவாத ஆட்சியை நாம் இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்.
எல்லோருக்கும் எல்லாம் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த ஆட்சியினுடைய கொள்கையையும், திட்டங்களையும் இன்றைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் பின்பற்றக் கூடிய வகையில் நாம் இன்று செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் வளர்ந்திருக்கிறது. காலநிலை மாற்றம் குறித்த கொள்கையை உருவாக்குவதில் இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.” என்று பேசினார்.