“ரொம்ப கஷ்டம்தான்.. இனி மீடியா நண்பர்கள்கிட்ட பேசுறது கொஞ்சம் ரிஸ்க்தான்.” என்று சலித்துக்கொண்டார் அந்த சிறைத்துறை சோர்ஸ். “விஷயத்தைச் சொல்லுங்க..” என்று நாம் கேட்பதும், அவர் தயங்குவதும் வழக்கமாக நடப்பதுதான். ஆனால், இந்த தடவை தன் உதடுகளின் மீது விரல் வைத்து ‘நான் பேசவே கூடாது‘என்பதை ’சிம்பாலிக்’ஆகச் சொன்னார்.
அவர் பேச மறுத்ததற்கான காரணம் இதுதான்-
கடந்த 11-ஆம் தேதி சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் சிறைத்துறை துணைத்தலைவர்கள், சிறை கண்காணிப்பாளர்களின் மாதாந்திர கூட்டம் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆபாஷ்குமார் முன்னிலையில் நடந்தது. அந்த நிகழ்ச்சி பதிவை இணைத்து, அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு உரிய அறிக்கையை வரும் 25- ஆம் தேதிக்குள் சமர்ப்பித்திட வேண்டுமென, கூடுதல் காவல்துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து, அனைத்து சரக சிறைத்துறை துணைத் தலைவர்கள், தலைமை நன்னடத்தை கண்காணிப்பாளர் மற்றும் சிறை கண்காணிப்பாளர்களுக்கு 20-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
சுட்டிக்காட்டப்பட்ட அந்த 37 கருத்துக்களில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள ‘வேலூர் சிறைத்துறை எஸ்.பி. உரிய நேரத்தில் அலுவலகம் வரவேண்டும். வழக்கமான வேலைகளில் சரியாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.’என்று அறிவுறுத்தியிருப்பதெல்லாம் ரெகுலர் சமாச்சாரம்தான். அந்த 7-வது கருத்துதான் நமது சோர்ஸை சில வினாடிகள் வாயடைக்கச் செய்துவிட்டது. அதில் அப்படியென்ன இருக்கிறது?
’சமீப காலமாக, வார்டர்கள் ஊடகங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, சிறைச்சாலைகள் குறித்த விபரங்களை அளித்துவருவதாக அறியப்படுகிறது. தவறான செய்திகளை ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களுக்கு தருகின்ற வார்டர்கள் யார் என்பதை, சிறைச்சாலைகள் டி.ஐ.ஜி. மற்றும் சிறைச்சாலை கண்காணிப்பாளர்கள் விசாரித்தறிந்து எச்சரிக்க வேண்டும். அந்த வார்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மெற்கொள்ள வேண்டும்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“இதற்கு என்ன அர்த்தம்?”என்று கேட்டுவிட்டு “சிறையில் என்ன நடந்தாலும் அது வெளியே தெரியக்கூடாது என்றுதானே சொல்ல வருகிறார்கள் மேலதிகாரிகள்..”என பதிலையும் சொன்ன அந்த சோர்ஸ் “எதற்காக நாங்கள் தவறான செய்திகளை ஊடகங்களுக்குத் தரவேண்டும்? சிறைக்குள் நடக்கின்ற தவறுகளைத்தானே உள்ளுக்குள்ளே அடக்கி வைக்க முடியாமல் வெளிப்படுத்துகிறோம். அதுவும்கூட, இதுபோன்ற தவறுகள் சிறையில் நடக்கவே கூடாது என்ற நல்லெண்ணத்தில்தானே பகிர்கிறோம்.” என்று ஆதங்கப்பட்டார்.
மேலும் அவர் “சிறைக்குள் நடக்கின்ற குற்றச்செயல் எதுவும் லீக் ஆகவே கூடாது என்கிறார்களே! அது என்ன ராணுவ ரகசியமா? தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விஷயமா? சில அதிகாரிகள் கைதிகள் சிலருடன் கூட்டு சேர்ந்து சிறைவிதிகளை காற்றில் பறக்க விடுகிறார்கள். கஞ்சா, செல்போன், போதைப்பொருட்கள், கத்தி போன்ற ஆயுதங்களெல்லாம் கைதிகளிடம் எப்படி வந்து சேர்கிறது? சோதனை என்ற பெயரில் கைதிகளிடம் பறிமுதல் செய்யப்படும் அத்தனையுமா கணக்கில் காட்டப்படுகிறது? அக்கிரமம் செய்பவர்கள் பலர் இருந்தாலும், நேர்மையுடன் வாழ்பவர்கள் சிலர் இருக்கத்தானே செய்வார்கள்?‘நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்..’என்கிறார் பாரதி.‘அநீதி கண்டு கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி எழுவாயானால் நாம் இருவரும் தோழர்கள்..’எனச் சொல்கிறார் சேகுவேரா. பாரதியையும் சேகுவேராவையும் படித்துவிட்டு சும்மா இருந்துவிட முடியுமா?” என்று நெஞ்சு நிமிர்த்திக் கேட்டபோது, அந்த சோர்ஸுக்கு ‘சல்யூட்’ வைத்தோம்.