ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் சவாரிக்கு வந்த சுற்றுலா பயணிகளை போலீஸ் எஸ்ஐ ஒருவர் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் காவிரி ஆறு தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் ஆகும். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்கின்றனர்.
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (39), ரத்தினபிரகாஷ் (42), ராகுல் (17), கார்த்திக் (19) உள்பட 14 பேர் கொண்ட ஒரே குடும்பத்தினர், செப். 24, 2018ம் தேதியன்று ஒகேனக்கல்லுக்கு சுற்று வந்திருந்தனர். காவிரியில் நீர் வரத்து அதிகரித்ததால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் காலை 11 மணியளவில், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். முருகேசன் உள்பட ஏழு பேர் மட்டும் பரிசலில் செல்ல விரும்பினர். இதற்காக அவர்கள் ஒரு பரிசலில் ஏறினர். அப்போது பரிசல் ஓட்டிகள், ஒரு பரிசலில் 4 பேர் மட்டுமே செல்ல முடியும் என்று கூறினர். ஆனால் முருகேசன் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, ஏழு பேரையும் ஒரே பரிசலில் அட்ஜஸ்ட் செய்து அழைத்துச் செல்லும்படி கூறினார்.
இதில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அங்குள்ள ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒரு காவலர், அவர்களை சமாதானப்படுத்தினார்.
அதற்கு முருகேசன், தான் ஒரு வக்கீல் என்றும், ஊர்க்காவல் படை காவலருக்கெல்லாம் கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை என்றும் கூறி அவருடனும் வாக்குவாதம் செய்தார். மேலும், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வருவாய்த்துறை ஊழியர்கள் சிலரும் முருகேசனை சமாதானப்படுத்தி முயற்சித்தனர். அவர்களிடமும் தகராறு செய்துள்ளார் முருகேசன்.
இதுகுறித்து பரிசல் ஓட்டிகள், ஊர்க்காவல் படை காவலர் ஆகியோர் பென்னாகரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீஸ் எஸ்ஐ மாரி மற்றும் சில போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். விசாரணையில் முருகேசன், சென்னையில் வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக வேலை பார்ப்பது தெரிய வந்தது.
மேலும், எஸ்ஐ மாரியுடனும் அவர் தகராறில் ஈடுபட்டார். அதனால் ஆத்திரம் அடைந்த எஸ்ஐ மாரி லத்தியால் முருகேசன் மற்றும் அவருடன் வந்த சிலரை திடீரென்று சரமாரியாக தாக்கினார். இதில் 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அங்கிருந்த சுற்றுலா பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோக்கள்தான் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக ஊடகங்களில் இரண்டு நாள்களாக வேகமாக பரவி வருகின்றன.
பின்னர் முருகேசன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை போலீசார் பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு முருகேசன், நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தர்மபுரி மாவட்ட எஸ்பி பண்டி கங்காதரிடம் கேட்டபோது, ''இது ஒரு பெரிய சம்வமே இல்லை. பிரச்னை செய்தவர்களில் சிலர் அன்று மது போதையில் இருந்தனர். உண்மையில், பரிசலில் 4 அல்லது ஐந்து பேருக்கு மேல் ஏறக்கூடாது. ஆனால் அவர்களில் 7 பேர் ஒரே பரிசலில் ஏறினர். அதை அங்கிருந்த பரிசல் ஓட்டிகளும், வருவாய்த்துறை ஊழியர்களும் எச்சரித்துள்ளனர். அதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து, அதை தடுக்கச்சென்றபோதுதான் போலீசாரையும் அந்த கும்பல் தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். குடிபோதையில் அவர்கள் போலீஸ் எஸ்ஐ மீது கைவைத்து தள்ளிவிட்டனர். அப்போது தற்காப்புக்காக எஸ்ஐ அவர்களை தாக்க நேர்ந்தது. அதில் உள்நோக்கம் ஏதுமில்லை.
போலீசாரை தாக்கினால் வழக்கமாக 'ரிமாண்டு' செய்வோம். ஆனால் அன்று அவர்கள் குடிபோதையில் இருந்ததாலும், உடன் பெண்கள் இருந்ததாலும் அவர்களை சிறிது நேரம் போலீஸ் நிலையத்தில் உட்கார வைத்துவிட்டு எச்சரிக்கை செய்து அனுப்பி விட்டோம். போலீசார் தாக்கிய காட்சிகளை மட்டும் எடிட் செய்து வாட்ஸ்அப்பில் சிலர் வீடியோவை பகிர்ந்துள்ளனர். போலீசாரை அவர்கள் தாக்கியதை மறைத்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் லட்சம் பேர் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்களில் பலர் மது போதையில் இருக்கலாம்.... மற்றவர்களை பாதுகாக்கும் நோக்கில் அவர்களை போலீசார் தாக்கலாம்... இப்படி தினமும் ஏதோ ஒன்று நடந்து கொண்டுதான் இருக்கும். இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை,'' என்றார்.