கட்டிடக்கலைக்குப் பெயர் பெற்ற பாரம்பரிய நகரான காரைக்குடியில் பழமைக்கு என்றுமே மதிப்புண்டு என்பதனை நிரூபித்திருக்கின்றது சனிக்கிழமையன்று நடைப்பெற்ற பழமையான நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்களின் கண்காட்சி.!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செட்டிநாடு ஹெரிடேஜ் கார் கிளப் அமைப்பினரால் வருடந்தோறும் "பழமையான வாகனங்களின் கண்காட்சி" நடத்தப்பெறுவது வழமையான ஒன்று. இந்தாண்டிற்கான பழமையான வாகனங்களின் கண்காட்சி சனிக்கிழமையன்று நடைப்பெற்ற நிலையில் ஆஸ்டின், டார்ஜ், மோரிஸ், பிளைமவுத், சிட்ரோன், வோல்க்ஸ்வாகன், பென்ஸ், ஹிந்துஸ்தான், செவெர்லெட், எலெகான்ட் ஜீப், லாண்ட்மாஸ்டர் மற்றும் அம்பாஸிடர் உள்ளிட்ட புகழ் பெற்ற நிறுவனங்களின் 1928 முதல் 1968 வரையிலான 50க்கும் மேற்பட்ட பழமையான நான்கு சக்கர வாகனங்கள் வரிசையாக பங்கேற்று பார்வையாளர்களையும், மாணவர்களையும் வசப்படுத்திய நிலையில், " இதோ நாங்களும் இருக்கின்றோம் உங்களுடன் போட்டிப் போட்டு" லேம்பெர்ட்ட ஸ்கூட்டர், ஆட்டோ, ஜாவா, மொபா ஆகிய புகழ்பெற்ற நிறுவனங்கள் தயாரித்த 35க்கும் மேற்பட்ட பழமையான இருசக்கர வாகனங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
கலந்து கொண்ட வாகனங்கள் அனைத்தும் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலத்தினை சார்ந்தவைகளே.! பார்வையாளர்கள் அதிகளவில் கலந்து கொண்டு பழமையான வாகனங்களின் வரிசையை ரசித்து, பழமைக்கு மதிப்பளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.