வேளாங்கண்ணி அருகே இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்த்து வருவதாக கூறி வடிவேலு பாணியில் திருடி செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி ஆர்ச் பூவைத்தேடி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர், பழைய இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மதியம் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், மூர்த்தியின் கடைக்கு வந்துள்ளார். அவர், வாகனத்தை வாங்க இருப்பதாகவும், அதற்காக ஸ்ப்ளெண்டர் பிளஸ் வாகனத்தை எடுத்து ஓட்டி பார்ப்பதாகவும் கூறியுள்ளார். மூர்த்தியும் அதனை நம்பி வாகனத்தை அந்த முதியவரிடம் கொடுத்துள்ளார். வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். ஆனால், வெகு நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.
இருசக்கர வாகனம் நீண்ட நேரமாக வராததால் தனது இருசக்கர வாகனம் திருடு போனதை உணர்ந்த மூர்த்தி, நீண்ட தூரம் சுற்றி திரிந்து பார்த்துவிட்டு வேறு வழியின்றி வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து புகார் அளித்துள்ளார்.