அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன்(90). இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு தனலட்சுமி(60), தர்மராஜ்(58) என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சாமிநாதனின் முதல் மனைவி உயிரிழந்துவிட்டார். இரண்டாவது மனைவி பஞ்சவர்ணம்(80), இவருக்கு தங்கமணி(48) என்ற மகன், சாந்தி என்ற மருமகள் உள்ளார்.
சாமிநாதன், தனது இரண்டாவது மனைவி பஞ்சவர்ணம் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், தனக்கு சொந்தமான சொத்துக்களை பிள்ளைகள் அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுத்துவிட்டு ஒரு ஏக்கர் நிலத்தை மட்டும் தன் பெயரில் வைத்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது மனைவியின் மகன் தங்கமணியின் நிர்பந்தத்தின் பேரில் அந்த நிலத்தையும் அவர் பெயருக்கு தானமாக எழுதிக் கொடுத்துள்ளார்.
2020ம் ஆண்டு ஜூலை மாதம் சாமிநாதன், திடீரென்று இறந்து கிடந்துள்ளார். அவரது இறப்பில் சந்தேகம் அடைந்த அவரது மகள் தனலட்சுமி விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். விக்கிரமங்கலம் போலீசார் தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் சாமிநாதன் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் விசாரணையில் சொத்துக்காக அவரது இரண்டாவது மனைவி பஞ்சவர்ணம், அவரது மகன் தங்கமணி, மருமகள் சாந்தி ஆகிய மூவரும் சேர்ந்து சாமிநாதனை கொலை செய்தது தெரியவந்தது.
இந்த கொலை வழக்கில் இரண்டாவது மனைவி, மகன், மருமகள் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, சில நாட்களில் ஜாமீனில் வெளிய வந்தனர். இது குறித்த வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில், நீதிபதி மகாலட்சுமி நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அதில் சொத்துக்காக சாமிநாதனை பஞ்சவர்ணம், தங்கமணி, சாந்தி, மூவரும் சேர்ந்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இவர்கள் மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார் உத்தரவிட்டார்.