Skip to main content

புள்ளி மானை வேட்டையாடிய வயதான தம்பதி

Published on 24/12/2022 | Edited on 24/12/2022

 

Old couple hunting spotted deer

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வனப்பகுதிக்கு உட்பட்டது கண்டியூர் கிராமம். இந்த பகுதியில் புள்ளிமானை வேட்டையாடுவதற்காக சுறுக்கு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளதாக காரமடை வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மாற்று உடையில் சென்ற வனத்துறையினர் காரமடை வனப்பகுதியை ரகசியமாக நோட்டமிட்டு வந்தனர்.

 

அப்போது, தங்களுக்கு கிடைத்த விவரங்களின் படி காரமடை சுற்றுவட்டாரப் பகுதியின் மலையடிவாரத்தில் புள்ளிமானை வேட்டையாடி அதன் இறைச்சிகளை விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காரமடை வனச்சரக அலுவலர் திவ்யா தலைமையிலான வனத்துறையினர் கண்டியூர் மலைப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியில் சந்தேகத்தின் பேரில் முதிய தம்பதிகள் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அந்த  தம்பதி கூறிய தகவல் வனத்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் புள்ளிமானை வேட்டையாடுவதற்காக சுறுக்கு கம்பிகள் வைத்ததை ஒத்துக்கொண்டனர்.

 

மேலும், அதில் சிக்கி உயிரிழந்த ஆண் புள்ளிமான் ஒன்றின் இறைச்சியை விற்பனைக்கு கொண்டு செல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, புள்ளிமானை வேட்டையாடிய குற்றத்திற்காக கெம்மாரம்பாளையம் சந்தானபுரம்‌ கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி அம்மாசை என்ற முதிய தம்பதியை வனத்துறையினர் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, மான் இறைச்சியை பறிமுதல் செய்த பிறகு அவர்கள் இருவருக்கும் அபராதம் விதித்துள்ளனர். வயதான தம்பதி ஒன்று சேர்ந்து புள்ளிமானை வேட்டையாடிய சம்பவம் கண்டியூர் கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்