புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள கொல்லன்வயல் கிராமத்தைச் சேரந்த முத்துராமன் என்ற இளைஞர் கடந்த வாரம் தனது நண்பருடன் அசாம் மாநிலம் சென்று அங்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் முத்துராமனும் அவரது நண்பரும் படுகாயமடைந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சுயநினைவின்றி சிகிச்சை நடந்து வந்த நிலையில் தகவல் அறிந்து முத்துராமனின் சகோதரர் அங்கு சென்று தம்பியின் நிலையறிந்து மருத்துவர்களிடம் கேட்ட போது, எங்களிடம் உள்ள வசதிகளை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவனைக்கு கொண்டு சென்றால் கூடுதல் சிகிச்சை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.
இதனால் டெல்லி கொண்டு செல்ல முடியாமல் தவித்த சகோதரர் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிவகங்கை தொகுதி எம் பி கார்த்தி ப சிதம்பரம், திருச்சி எம்பி திருநாவுக்கரசர் ஆகியோரிடம் உதவிகள் கேட்டிருந்தார். தொடர்ந்து நக்கீரன் மூலமாக நாம் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்பிகளிடம் உயிர் காக்க நடவடிக்கை கோரி இருந்தோம்.
6 நாட்களுக்கு மேலும் முன்னேற்றம் இல்லாததால் தனி ஒருவனாக அசாமில் எதையும் செய்ய முடியாமல் தவித்த சகோதரர் தனது தம்பியின் உயிரை காக்க தனியார் முகவர்கள் மூலம் ரூ 1.20 லட்சம் செலுத்தி ஞாயிற்றுக் கிழமை காலை 5.30 மணிக்கு ரயில் ஆம்புலன்ஸ் மூலம் தனது தம்பி முத்துராமனை கொண்டு வந்து கொண்டுவந்தார்.
செவ்வாய் கிழமை அதிகாலை ரயில் சென்னை வந்தடைந்த போது அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் இருவர் முத்துராமனை தமிழக அரசு மருத்துவமனையான ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அசாமில் வைத்துக் கொண்டு உயர் சிசிக்சைகள் கொடுப்பதில் சிக்கல் இருந்தது. அதனால் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரச் செய்தோம். சென்னை ரயில்நிலையம் வந்ததும் பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சோதனைகள் செய்து சிகிச்சை தொடங்கப்படும். உயர் சிகிச்சைகள் அளிப்போம் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
இது குறித்து முத்துராமனின் உறவினர்கள்.. அசாமில் தனி நபராக எதுவும் செய்ய முடியாமல் தவித்து சென்னை கொண்டு வந்துவிட்டார். சென்னை கொண்டு வந்த உடன் மிகவும் அவசர சிகிச்சை அளித்து முத்துராமன் உயிரை காப்பாற்ற தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தனர். இப்போது அமைச்சர் பொறுப்பில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என கண்ணீருடன் நன்றி சொன்னார்கள்.