அரியலூரில் கோழி இறைச்சி குழம்பை அடுத்த நாள் சூடு செய்து சாப்பிட்ட பொழுது சிறுமி ஒருவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கூழாட்டுக்குப்பம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் - அன்பரசி தம்பதியினர். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சம்பவத்தன்று கோவிந்தராஜ் தான் புதிதாகக் கட்டவிருக்கும் வீட்டிற்கு அஸ்திவாரம் போடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதனையொட்டி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற அவர்கள் கோழிக்கறி எடுத்து வீட்டில் சமைத்துள்ளனர்.
மீதமிருந்த கோழிக்கறி குழம்பை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சூடு செய்து சாப்பிட்டுள்ளனர். அப்பொழுது பழைய கறிக் குழம்பை சாப்பிட்ட ஏழாம் வகுப்பு பயின்று வரும் இளைய மகள் இலக்கியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து போனார். அதேபோல் பழைய கோழிக் கறி குழம்பை சாப்பிட்ட தந்தை கோவிந்தராஜ், தாய் அன்பரசி, சகோதரி துவாரகா ஆகியோரும் உடல் நலக்குறைவு காரணமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழைய சிக்கன் குழம்பு சாப்பிட்டு சிறுமி உயிரிழந்தது அந்தப் பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.