கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள அக்கடவல்லி தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் மேற்புறம் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது சங்ககாலத்தைச் சேர்ந்த குழந்தை பொம்மை மற்றும் வட்டச்சில்லு ஆகியவற்றை கண்டெடுத்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: ஏற்கனவே பண்ருட்டி பகுதி தென்பெண்ணையாற்றங்கரையில் மேற்புற கள ஆய்வின் போது சுடுமண்ணாலான பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்ட போது அக்கடவல்லி பகுதியில் சங்ககாலத்தைச் சேர்ந்த சுடுமண்ணாலான குழந்தைப் பருவ பொம்மை, சுடுமண் பொம்மையின் உடைந்த கை பாகம், வட்டச்சில்லு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
கண்டெடுக்கப்பட்ட குழந்தைப் பருவ பொம்மை பாதி உடைந்த நிலையில் உள்ளது. உடைந்த பொம்மையில் இடுப்பு பகுதியின் கீழ்ப்பகுதி மட்டும் காணப்படுகிறது. குழந்தை உட்கார்ந்த நிலையில் இருப்பது போல் உள்ளது. மற்றொன்று உடைந்த சுடுமண் பொம்மையின் கை பகுதி மட்டும் கிடைத்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் சங்ககாலப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடப் பயன்படுத்திய வட்டச்சில்லுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தென்பெண்ணையாற்றங்கரை பகுதியில் கிடைக்கக் கூடிய தொல்பொருட்களைப் பார்க்கும்போது பழங்கால மக்கள் இப்பகுதிகளில் வாழ்ந்து இருக்கின்றனர் என அறியமுடிகிறது. இதுபோன்ற சுடுமண்ணாலான பொம்மைகள் தமிழக அகழ்வாய்வுகளில் அதிகம் கிடைத்துள்ளன.