Skip to main content

ரஜினி, ஜெயலலிதா படங்களுக்கு கதை எழுதிய மூத்த எழுத்தாளர் மகரிஷி மரணம்!

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

தமிழ் படைப்புலகத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரும், ரஜினிகாந்த், ஜெயலலிதா ஆகியோருடைய படங்களின் கதை ஆசிரியருமான மகரிஷி, நேற்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.

சேலம் ஜான்சன்பேட்டை குறிஞ்சி அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் மகரிஷி. இவருடைய மனைவி பத்மாவதி. ஓய்வுபெற்ற நூலகர். இவர்களுக்கு ஸ்ரீவத்ஸன் என்ற மகனும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். கிருஷ்ணசாமி - மீனாட்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

 

story writer maharishi passed away


அந்தக்காலத்திலேயே எஸ்எஸ்எல்சி வரை படித்தவர். பின்பு, மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார். பணியின் பொருட்டு தஞ்சையில் இருந்து சேலத்திற்கு 1950ம் ஆண்டு வாக்கில் குடிபெயர்ந்தார். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் பாலசுப்ரமணியம். ஆன்மிகம் மற்றும் எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்ட அவர், இரண்டுக்கும் தொடர்பு உள்ள வகையில் தனது பெயரை மகரிஷி என்று வைத்துக் கொண்டார். இலக்கிய உலகில் தனக்கென தனித்த அடையாளத்துடன் விளங்கினார்.

தமிழ் படைப்புலகில் அவருடைய சமகாலத்தில் வாழ்ந்த எந்த ஒரு நாவலாசிரியருக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு மகரிஷிக்கு உண்டு. இவருடைய நாவல்கள்தான் அதிகளவில் தமிழில் படமாக்கப்பட்டு உள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றுக்கொடுத்த 'புவனா ஒரு கேள்விக்குறி' படம், மகரிஷியின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடைசியாக நடித்த 'நதியைத் தேடிவந்த கடல்' படத்தின் கதை ஆசிரியரும் இவரே என்பது தமி-ழ் எழுத்தாளர்கள் யாருக்கும் கிடைக்காத தனிச்சிறப்பு.

இவர் எழுதிய பனிமலை, என்னதான் முடிவு, பத்ரகாளி, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வட்டத்துக்குள் சதுரம் ஆகிய நாவல்களும் அதே பெயர்களில் படமாக்கப்பட்டு உள்ளன. இதுவரை 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60 கட்டுரைகள் உள்பட 22 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதிக் குவித்துள்ளார்.

 

story writer maharishi passed away

 

கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் உடல்நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு வீடு திரும்பியதும் எப்போதும்போல எழுத்துப்பணியில் ஈடுபட்டு வந்தார். நீண்ட காலமாக சேலம் ராஜா எக்ஸ்டென்ஷன் பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த மகரிஷி, இரு ஆண்டுகளுக்கு முன்புதான் ஜான்சன் பேட்டையில் மகன் வசிக்கும் வீட்டுக்கு வந்தார்.

இந்நிலையில், நேற்று (செப். 27) இரவு வழக்கம்போல் இரவு உணவை முடித்துவிட்டு படுக்கைக்குச் சென்றார். இரவு 9 மணியளவில் மகரிஷிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருடைய உயிர் பிரிந்தது.

இன்று காலையில்தான் அவர் மரணம் அடைந்த தகவல் பலருக்கும் தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முக்கிய பிரமுகர்கள், படைப்பாளிகள் அவருடைய உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். ஜான்சன்பேட்டையில் உள்ள மாநகராட்சி மின்மயானத்தில் மகரிஷியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்