Skip to main content

ஒக்கி புயல்! திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

Published on 01/12/2017 | Edited on 01/12/2017

ஒக்கி புயல்! திமுகவினருக்கு 
மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு விடுத்துள்ள வேண்டுகோள்!
 
’’ஒக்கி புயல் எச்சரிக்கையாலும் தொடர் மழையாலும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு 4 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. அம்மாவட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து செய்திருக்க வேண்டிய குதிரை பேர அதிமுக அரசு, வழக்கம் போல் அலட்சியம் காட்டி வருவது அதைவிட வேதனை தருவதாக அமைந்திருக்கிறது. மக்களுக்கு மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்ட பிறகும் இன்னும் அரசு நிர்வாகம் செயலிழந்து, கையறு நிலையில் நிற்பது குதிரை பேர அரசு இதுவரை ஏற்பட்ட பல பேரிடர்களில் இருந்து எவ்வித பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதில் எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை என்பது இன்னும்  பேரதிர்ச்சி அளிக்கிறது.

     ஆகவே இனி இந்த கையாலாகாத அதிமுக அரசை நம்பி பிரயோஜனமில்லை என்ற நிலையில், எப்போதும் போல் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் களப்பணியில் இறங்கி ஆங்காங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

 குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட புயலாலும், மழைசேதத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட மக்களுக்கு உடனடி நிவாரணப் பணிகளில் கழக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் முனைப்புடன் ஈடுபட்டு உண்ண உணவு,  பாதுகாப்பான குடிநீர், உடுக்க உடை, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி ஆங்காங்கு உள்ள அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’’

சார்ந்த செய்திகள்