Skip to main content

அரசியல் கட்சியை தொடங்கிய பிரஷாந்த் கிஷோர்; முதல் பேச்சில் தமிழ்நாட்டைப் பற்றி விமர்சனம்!

Published on 03/10/2024 | Edited on 03/10/2024
Prashant Kishore who started a new party in bihar

தேர்தல் வியூக கணிப்பாளர்களில் முதன்மையாக கருதப்படுபவர் பிரஷாந்த் கிஷோர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்து கொடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்து கொடுத்து அந்த கட்சிகளை வெற்றி பெறவும் செய்திருக்கிறார். 

தேர்தல் வியூகங்கள் பணியை கைவிட்ட இவர், அரசியல் தொடர்பான கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வந்தார். பீகார் மாநில அரசியலில் அதிக ஆர்வம் காட்டிய பிரஷாந்த் கிஷோர், ‘ஜன் சுராஜ்’ எனும் இயக்கத்தை தொடங்கி மாநிலம் முழுவதும் சுமார் 3,000 கி.மீ பாதயாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆதரவை பெற்று வந்தார். 2 ஆண்டுகளாக தொடர்ந்து பாதயாத்திரை மேற்கொண்டு வந்த பிரஷாந்த், தற்போது தனது இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்துள்ளார். 

மகாத்மா காந்தி பிறந்தநாளான நேற்று( 02-10-24), காந்தி ஜெயந்தி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்றைய தேதியில், தனது அரசியல் கட்சியான ‘ஜன் சுராஜ்’ எனும் கட்சியை முறைப்படி தொடங்கியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரசாத் யாதவ், முன்னாள் எம்.பி மோனாசிர் ஹாசன் உள்ளிட்ட பல புகழ்பெற்ற பிரமுகர்களின் முன்னிலையில் தொடங்கிய இந்த கட்சியின் செயல் தலைவராக, முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி மனோஜ் பார்தியை, அக்கட்சியின் தலைவர் பிரஷாந்த் கிஷோர் நியமித்துள்ளார். 

இந்த விழாவில் பேசிய பிரஷாந்த் கிஷோர், “பீகாரில் கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக மக்கள், ராஷ்டிரிய ஜனதா தளம் அல்லது பாஜகவுக்கு வாக்களித்து வருகின்றனர். அந்த நிர்ப்பந்தம் முடிவுக்கு வர வேண்டும். நீங்கள் அனைவரும் ‘ஜெய் பீகார்’ என்று சத்தமாகச் சொல்ல வேண்டும். உங்கள் குரல் டெல்லியை எட்ட வேண்டும். பீகார் மாணவர்களை தாக்கிய வங்காளத்தை அடைய வேண்டும். முக்கியமாக தமிழ்நாடு, டெல்லி, மும்பை என எங்கெல்லாம் பீகார் குழந்தைகள் தாக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் உங்கள் குரல் கேட்க வேண்டும். 

குஜராத்தின் வளர்ச்சிக்கு மோடி நிறைய செய்திருக்கிறார் என்ற எண்ணத்தில் அவரது பேச்சைக் கேட்டு என்னை போன்றவர்களும், உங்களைப் போன்றவர்களும், மோடிக்கு வாக்களித்தோம். உண்மையில் குஜராத் முன்னேறி வருகிறது. ஒட்டு மொத்த தேசத்தின் செல்வமும் குஜராத்தில் திசை திருப்பப்பட்டதாகத் தெரிகிறது, அங்கு ஒவ்வொரு கிராமத்திலும் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன. பீகாரில் இருந்து மக்கள் வேலை தேடி அந்த மாநிலத்திற்கு படையெடுத்து செல்கின்றனர். குஜராத்தின் வளர்ச்சிக்காக வாக்களித்த பீகார் மக்கள் எப்படி வளர்ச்சி பெற முடியும்?” என்று பேசினார். 

பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகார் மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். அங்கி பிரதான எதிர்கட்சியாக, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

சார்ந்த செய்திகள்