ஹரியானா மாநிலத்தில், வரும் அக்டோபர் 5ஆம் தேதியன்று(நாளை மறுநாள்) ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள், அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. மொத்தம் 90 தொகுதிகள் உள்ள ஹரியானா மாநிலத்தை 10 ஆண்டுகளாக நயாப் சிங் சனி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வரும் நிலையில், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
அதே சமயம் பா.ஜ.கவை வீழ்த்தும் வகையில் காங்கிரஸ் கட்சியும் காய் நகர்த்தி வருகிறது. தேசிய அளவில், இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும், ஹரியானா மாநிலச் சட்டசபைத் தேர்தலில் தனித்தனியே களம் காண்கின்றன. இந்த தேர்தலை முன்னிட்டு, பல்வேறு கட்சித் தலைவர்கள் அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருந்தாலும், இந்த முறை வெற்றிபெறுவது பாஜகவிற்கு கடும் சவாலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் கூட அதையே பிரதிபலிப்பதாக இருந்தது. ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் 5 தொகுதிகளைக் காங்கிரஸ் கைப்பற்றியது.
இந்த நிலையில்தான் சட்டமன்ற தேர்தல் பாஜகவிற்கு கடும் போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று(3.10.2024) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்துள்ள நிலையில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ஒருவர் காலையில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்துவிட்டு, அடுத்து ஒரு மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் பட்டியல் சமூகத் தலைவராக பார்க்கப்படும் அஷோக் தன்வார் 2014 - 2019 வரை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்திருக்கிறார். இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு திடீரென காங்கிரஸில் இருந்து விலகி தன்னை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர், ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். ஆனால் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகிக் கடந்த ஜனவரி மாதம் பாஜகவில் சேர்ந்தார். அதன் பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட அவர் காங்கிரஸ் வேட்பாளர் குமாரி செல்ஜாவிடம் தோல்வியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வந்த அவர் இன்று காலை பாஜக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் மொத்தமாக மாறி ராகுல் காந்தி முன்னிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அஷோக் தன்வார் அதன்பிறகு 3 கட்சிகள் மாறி இறுதியாக மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.