இந்தியாவின் தேசிய தந்தையான மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் தேதியன்று, காந்தி ஜெயந்தி விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு அரசியல் தலைவர்கள், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் காந்தி ஜெயந்தி விழாவுக்காக நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “சாவர்க்கர் ஒரு பிராமணர். ஆனால் அவர் மாட்டிறைச்சி சாப்பிட்டார். அசைவ உணவு உண்பவராக இருந்தார். அவர் பசுவதையை எதிர்க்கவில்லை. உண்மையை சொல்லப்போனால், இறைச்சி சாப்பிடுவதை வெளிப்படையாக ஊக்குவித்தார். சாவர்க்கரின் கருத்துக்கள், மகாத்மா காந்தியின் கருத்துக்களோடு முரண்படுகிறது. சாவர்க்கரின் சித்தாந்தம் அடிப்படைவாதத்தை நோக்கி சாய்ந்துள்ளது. ஆனால், காந்தி ஆழமான ஜனநாயகத்தை நம்பிக்கை கொண்டிருந்தார்.
காந்தி, இந்து கலாச்சார பழமைவாதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு கடுமையான சைவ உணவுகளை உண்டார். அவர் தனது அணுகுமுறையில் ஜனநாயகவாதியாக இருந்தார்” என்று பேசினார். சாவர்க்கர் குறித்து காங்கிரஸ் அமைச்சர் இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.