திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த மலைக்கிராம பொதுமக்கள் மற்றும் பழங்குடியின மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆத்தூர் தொகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சிமலை கிராமமான ஆடலூர் ஊராட்சியில் குடிதண்ணீர் ஒருசில பகுதிகளுக்கு முறையாக கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ''ஆத்தூர் தொகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைகிராம ஊராட்சிகளில் ஆடலூர் பன்றிமலை, குத்துக்காடு, பெரும்பாறை, தோனிமலை, சோலைக்காடு, அமைதிச்சோலை, அழகுமடை, புல் லாவெளி, மஞ்சள்பரப்பு, வெள்ளரிகரை, கலைஞர் நகர், கொங்கபட்டி உட்பட பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு முறையாக குடிதண்ணீர் வசதி கிடைக்கிறதா என்பதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கண்காணிக்க வேண்டும். மலைக்கிராம மக்களுக்கு 100சதவீதம் அரசு நலத்திட்டங்கள் சென்றடையும் வகையில் அரசுத்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும்'' என உத்தரவிட்டார்.
ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிநியமனம் செய்யப்பட்ட நடராஜன் என்பவர் அமைச்சரிடம் பணிநியமன ஆணையைக் கொடுத்து வாழ்த்து பெற்றார். நிகழ்ச்சியின் போது திண்டுக்கல் எம்.பி.ப.வேலுச்சாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் சத்தியமூர்த்தி, வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன், மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் ஜெயன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி, ஒன்றிய செயலாளர்கள் திண்டுக்கல் நெடுஞ்செழியன், ஆத்தூர் முருகே சன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.