சிதம்பரம் அருகே 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தில் நெற்பயிர் மற்றும் நாற்றங்கால் மழை மற்றும் கொள்ளிடம் ஆற்று நீரால் வீணாகி உள்ளது என நக்கீரன் இணையச் செய்தியின் எதிரொலியாக வேளாண் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம், வடக்கு பிச்சாவரம், கீழத்திருக்கழிப்பாலை, மேலத்திருக்கழிப்பாலை, கனகரப்பட்டு, கிள்ளை, கீழச்சாவடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வயல்களில் சம்பா நடவு செய்த நெற்பயிர்கள் மற்றும் நடவுக்குத் தேவையான நாற்றங்கால், மழை மற்றும் கொள்ளிடம் ஆற்று நீர் கடலில் வடியாமல் எதிர்த்து வந்ததால் வீணாகிப் போனது எனக் கடந்த 4-ந்தேதி நக்கீரன் இணையத்தில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இந்தச் செய்தி விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் செய்தி குறித்து விபரம் அறிந்த வேளாண்மை உதவி இயக்குநர் நந்தினி, வேளாண்மை அலுவலர் தீபதர்ஷினி, துணை வேளாண் அலுவலர் சிவசங்கர் மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட தெற்கு பிச்சாவரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட நாற்றங்காலில் ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் இது குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, மழையால் சேதம் அடைந்த நிலங்களை ஆய்வு செய்ய அரசு உத்தரவிடும்போது இதனைக் கணக்கில் எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். இவர்களுடன் கான்சாகிப் வாய்க்கால் பாசன சங்கத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட கிராமத்திலுள்ள விவசாயிகள் உடன் இருந்தனர்.