Skip to main content

ஏழைகளுக்கு அடிப்படை வருமான திட்டம் : பயனுள்ள வகையில் செயல்படுத்த வேண்டும்! ராமதாஸ்

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
r


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை :  ’’இந்தியா முழுவதும் உள்ள ஏழைகளுக்கு அடிப்படை வருமானமாக மாதம் ரூ.2500 வழங்கும் திட்டம்,  குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8000 வழங்கும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்திட்டங்கள் தனித்து செயல்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பயனளிக்கும் என்பதில்  ஐயமில்லை. ஆனால், இத்திட்டத்திற்கான சில கட்டுப்பாடுகள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தான் கவலையளிக்கிறது.

 

மத்திய அரசு தயாரித்துள்ள திட்டப்படி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்துக்கும் மாதம் ரூ.2500 அடிப்படை  வருமானம் வழங்கப்படும் நிலையில், அக்குடும்பங்களுக்கு ஏற்கனவே வழங்கப் பட்டு வரும் உணவு மானியம், எரிவாயு மானியம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் நிறுத்தப்பட்டு  விடும். இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.1.28 லட்சம் கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

                                                                                                                                                                       

ஏழைகளுக்கு அடிப்படை வருமானம் அளித்து விட்டு, இருக்கும் உரிமைகளை பறிப்பது வறுமையை ஒழிக்க எந்த வகையிலும் உதவாது. ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவு மானியம் நிறுத்தப்பட்டால், அதைக் காரணம் காட்டி பொதுவழங்கல் திட்டம் ரத்து செய்யப்பட்டு, நியாயவிலைக் கடைகள் மூடப்படும் ஆபத்து உள்ளது. பொதுவாக ஒரு குடும்பத்தில் 5 உறுப்பினர்கள் இருப்பதாக கணக்கில் கொண்டு தான் மாதம் ரூ.2500 என்ற தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அடிப்படை வருமானமும் குறையக்கூடும். அவர்களுக்கு வெளிச்சந்தையில் உணவு தானியங்கள், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றை வாங்குவதாக இருந்தால் அதற்கு அரசு  வழங்கும் அடிப்படை வருமானம் போதுமானதாக இருக்காது. அதுமட்டுமின்றி, நியாயவிலைக்கடைகள் மூடப்பட்டால், அது வெளிச்சந்தையில் உணவு தானியங்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும். அத்துடன், நேரடி நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டு உழவர்களுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

 

அடிப்படை ஊதியத் திட்டத்தைக் காரணம் காட்டி மதிய உணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளிட்ட சமூகப்பாதுகாப்புத் திட்டங்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்  திட்டம் போன்றவையும் ரத்து செய்யப்படக்கூடும். அவ்வாறு செய்யப்பட்டால் அது ஏழைக் குழந்தைகளின் கல்வியை பாதிப்பதுடன், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும். எந்த நோக்கத்திற்காக இத்திட்டம் கொண்டு வரப்படுகிறதோ, அதையே இது சிதைத்து விடும் என்பதை அரசு உணர வேண்டும்.

 

அதேபோல், குறு உழவர்களுக்கு ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.8000 நிதியுதவி வழங்கும் திட்டத்தின்படி, உழவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உர மானியம், இலவச மின்சாரம் ஆகியவை நிறுத்தப் படும். விவசாயத்திற்கான இடுபொருள் செலவுகளும், ஆள்கூலியும் அதிகரித்து விட்ட நிலையில் அரசு சார்பில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உதவிகள் நிறுத்தப்பட்டால் அது பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

                             

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை கைத் தூக்கி விடுவதற்காக ஏழைகளுக்கு அடிப்படை வருமானம் வழங்கும் திட்டம் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உத்தி ஆகும். பின்லாந்து, கனடா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. இன்னும் பல நாடுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி கொள்கை அளவில் இத்திட்டத்தை ஆதரித்து வருகிறது. ஆனால், இந்தியச் சூழலில் இத்திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்துள்ள விதம் வறுமையை ஒழிக்கவோ, வளர்ச்சியை ஊக்குவிக்கவோ உதவாது.

 

மாறாக, எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் இந்த இரு திட்டங்களும் செயல்படுத்தப்படும் போது, அவை சம்பந்தப்பட்ட பிரிவினரின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும். 2009-ஆம் ஆண்டு  அக்டோபர் 3-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நான் வெளியிட்ட உழவர்களுக்கான கொள்கை அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கான ஊதியக் குழுவைப் போன்று உழவர்களுக்கான ஊதியக் குழு அமைக்கப்பட வேண்டும், உழவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன. பா.ம.க. வெளியிட்ட 2018-19 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மூலதன மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதையொட்டியே மத்திய அரசின் திட்டமும் அமைந்துள்ளது.

 

எனவே, ஏழை மக்களுக்கும், உழவர்களுக்கும் இப்போது வழங்கப்பட்டு வரும் மானியங்கள், சேவைகள் உள்ளிட்ட அனைத்தையும் தொடரச் செய்து, அத்துடன் கூடுதலாக ஏழைகளுக்கு அடிப்படை வருமானம் வழங்கும் திட்டத்தையும், விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். அத்துடன், அடிப்படை ஊதியம் ஆண்களிடம் வழங்கப்படும் போது அதை அவர்கள் ஓரிரு நாட்களில் தவறான வழிகளில் செலவழித்து விட்டால் குடும்பம் வறுமையில் வாடும் என்பதால், அரசு வழங்கும் அடிப்படை ஊதியம் குடும்பத்தலைவிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.’’

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்த கூட்டணி வெற்றிபெறவில்லை என்றால்...-ராமதாஸ் பேச்சு

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

 

காஞ்சிபுரம் கேளம்பாக்கத்தில் நடந்துவரும் அதிமுக பாஜக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டத்தில்  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்,

 

conference

 

இந்த நல்ல நேரத்தில் ஒரு அருமையான கூட்டணியை முதல்வரும் துணைமுதல்வரும் ஆழ்ந்து யோசித்து வெற்றிகரமான கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணி வெற்றிபெறவில்லை என்று சொன்னால் வேறு எந்த கூட்டணியும் வெற்றிபெற முடியாது. இந்த கூட்டணி அமைத்ததற்கு என் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கூட்டணியில் பாமக இணைவதற்கு தமிழகத்தின் நலன் பெருகவேண்டும் என்ற நோக்கில் 10 அம்ச கோரிக்கையுடன் இந்த கூட்டணியில் சேர்ந்திருக்கிறோம்.

 

conference

 

10 அம்ச கோரிக்கையில் முதலாவது ஒன்று 7 தமிழர்களை விடுதலை செய்வது. ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் ஆனால் தற்போது நிலை அப்படி இல்லை எனக்கூறினார். 

 

மேலும் தமிழை மத்திய அலுவல் மொழியாக வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பிரதமரிடம் வைக்கிறேன் என கூறினார்.