![Officials are inspecting food quality in restaurants in Erode](http://image.nakkheeran.in/cdn/farfuture/IppnAFX-n5sr61TOp8y7l03IHhLzEWROMdbYTedfaBE/1695127599/sites/default/files/inline-images/164_30.jpg)
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி தனது குடும்பத்தினருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சவர்மா மற்றும் துரித உணவு வாங்கிச் சாப்பிட்டுள்ளார். இதில் அந்த மாணவி பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்ய வேண்டும் எனச் சுகாதாரத் துறையினர் அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தி இருந்தனர்.
அதன்படி இன்று ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையில், அலுவலர்கள் செல்வன், அருண்குமார் தலைமையிலான குழுவினர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஓட்டலில் சிக்கன், நூடுல்ஸ் உள்படப் பல்வேறு உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. உணவு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டதில் 12 கிலோ காலாவதியான சிக்கன் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.
இதனை அடுத்து அந்த 12 கிலோ சிக்கனை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பினாயில் ஊற்றி அழித்தனர். இதைத் தொடர்ந்து மற்ற ஓட்டல்களிலும் ஆய்வு செய்யப்படும் என மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தெரிவித்தார்.