தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையின் அலுவலர்கள் மொத்தம் 14 ஆயிரம் பேர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். முதல்கட்டமாக கடந்த பிப்.13ம் தேதி ஒட்டுமொத்த ஊழியர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் கட்ட போராட்டமாக அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய ஊழியர்கள் நேற்று(26.2.2024) வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்றாம் கட்ட போராட்டமாக இன்று (27.2.2024) முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் மொத்தம் 400 ஊழியர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் வாயிலாக பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை உடனே வெளியிட வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும். முதுநிலை நிர்யணம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்திட மனிதவள மேலாண்மைத்துறை மூலமாக தெளிவுரை வழங்கிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையினை உடனே வெளியிட வேண்டும். பேரிடர் மேலாண்மைப்பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
இன்று முதல் தொடங்கிய காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக பிறப்பு, இறப்பு, வாரிசு, விதவை உள்ளிட்ட அனைத்து வகையான சான்றுகள் வழங்கும் பணிகளும், தேர்தல் மற்றும் அலுவலகப் பணிகளும் முற்றிலும் தடைபட்டுள்ளது.