சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலாவை வரவேற்று தென் மாவட்டமான நெல்லை மாவட்ட அ.தி.மு.க.வின் முதல் பொறுப்பாளரான சுப்பிரமணிய ராஜா போஸ்டர் ஒட்டியது அ.தி.மு.க. வட்டாரங்களைக் கலக்கியெடுத்தது.
சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியதால், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார் சுப்பிரமணிய ராஜா. ஆனால் நீக்கப்பட்ட சுப்பிரமணிய ராஜாவோ, அமைச்சர்கள் சிலர் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் சசிகலாவை ஆதரித்துப் பேசியபோது அவர்கள் மீது கட்சி நடவடிக்கை இல்லை, சாதாரணப் பொறுப்பாளரான என் மீது நடவடிக்கையா என்று பதிலுக்குக் கேட்டிருக்கிறார்.
இதையடுத்து அ.தி.மு.க.வின் தொண்டர்கள் சசிகலாவை வரவேற்றுப் போஸ்டர் அடித்தபோதும், கட்சித் தலைமை அவர்களை நீக்கியது தொடர்ந்திருக்கிறது. இந்த நிலையில் தென் மாவட்டத்தின் நெல்லை, தென்காசி மாவட்டப் பகுதிகளில் அ.தி.மு.க.வில் சசிகலா ஆதரவு வட்டம் ஏராளம் உள்ளனர்.
குறிப்பாக, பனவடலிசத்திரம் பகுதியில், இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். படங்களுடன் சசிகலாவை வரவேற்று அந்தப் பகுதியின் பொறுப்பாளரான பெருமாள் சாமி, அய்யாத்துரை, முருகன் ஆகியோர் இணைந்து, 'தவ வாழ்க்கை வாழ்ந்த தியாகியே. அ.தி.மு.க.வின் தலைவியே. எதிரியை வீழ்த்த வரும் வீரமங்கையே வருக வருக வருக' என்று வாழ்த்திப் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது நெல்லைப் பகுதியைக் கலக்கியிருக்கிறது.
இது இப்போது புள்ளிதான். போகப் போக விரியும் பாருங்கள் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இந்தப் போஸ்டர் அருகிலுள்ள சங்கரன்கோவிலையும் பரபரப்பாக்கியிருக்கிறது.