புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை கந்தவர்கோட்டையில் மக்கள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர்.
கந்தவர்கோட்டை கடைவீதியில் மக்கள் நடமாட்டம் இருந்த நேரத்தில், அந்த வழியில் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அப்போது அவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். புயல் அடித்து இத்தனை நாள் ஆகிறது ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பினர். குடிநீர், மின்சாரம் வழங்கக்கோரி முழக்கங்களை எழுப்பினர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றார்.
அப்போது பொதுமக்கள் விஜயபாஸ்கரை சரமாரியாக கேள்வி கேட்டனர். துணை முதலமைச்சரிடம் குறை சொல்வதை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள். நீங்களும் செய்ய மாட்டீர்கள். அவரிடம் சொல்லவும் விடமாட்டீர்கள். யாரிடம் குறைகளை சொல்வது, குடிக்க தண்ணீர் இல்லாமல், பால் இல்லாமல் கஷ்டப்படுவது எங்க வீட்டு பிள்ளைகள் என பொதுமக்கள் விஜயபாஸ்கரிடம் வாக்குவாதம் செய்தனர்.
கரெண்ட் இல்லாமல், குடிக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறோம் சார், கரெண்ட் இல்லாத எங்க ஊர்ல ஒரு நாள் தங்குங்க. உங்களால முடியுமா? எங்க கஷ்டத்தை நினைச்சி பாருங்க சார் என ஓ.பன்னீர்செல்வத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் கூறினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அந்த இடத்திலிருந்து ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் ஆகியோர் சென்றனர்
.