இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 130 கோடியைத் தாண்டப் போகிறது. இதில் தமிழக மக்கள் தொகை சுமார் 10 கோடியை எட்டும் நிலை உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்திற்க்கு ஏற்றவாறும், நிர்வாக வசதிக்காகவும் 32 மாவட்டங்களாக இருந்ததை 37 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஊராட்சி ஒன்றியங்கள் தாலுக்காகள் வருவாய் கோட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள பெரிய ஊராட்சிகளை பிரித்து தனிதனி ஊராட்சிகளாக அறிவித்து உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக பொதுமக்கள் மத்தியில் எதிரொலித்து வருகிறது. அதை அரசு கண்டுகொள்ளாததால் போராட்டத்தின் மூலமும் உயர்நீதிமன்றம் சென்றும் உத்தரவு பெற்று வந்த பிறகும் கூட ஊராட்சிகளைப் பிரிக்க அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
தமிழக்த்தில் 12,524 ஊராட்சிகள் உள்ளன. இந்த கணக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்த காலகட்டத்தில் சுதந்திரத்திற்கு பின்பு கிராம பஞ்சாயத்துகள் பிரிக்கப்பட்டன. அதன் பிறகு இப்போது வரை பெரிய அளவில் ஊராட்சிகள் உருவாக்கப்படவில்லை. இரண்டு, மூன்று, நான்கு குட்கிராமங்களை இணைத்து ஒரு ஊராட்சியாக அப்போது உருவாக்கபட்டது. ஆனால், இப்போது குடியிருப்புகள் அதிகரித்து அதன் மூலம் கிராமங்கள் விரிவடைந்து பெருகியுள்ளன. அதை கருத்தில் கொண்டு பல பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் கிராம ஊராட்சிகளை மட்டும் அரசு கண்டுகொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில் மக்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு தனது ஊராட்சியை தனி ஊராட்சியாகக் பிரித்து அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில வழக்கு தொடுத்து வெற்றி பெற்றுள்ளார் நெடி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்.
அவரை சந்தித்தோம். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுக்கா மயிலம் ஒன்றியத்தில் உள்ளது எங்கள் நெடி மற்றும் மேழியநூர் கிராமம். எங்கள் இரு ஊர்களுக்கும் இடையே நான்கு கிலோமீட்டர் தூரம் உள்ளது. எங்கள் ஊரான நெடியில் 1582 வாக்காளர்கள் உள்ளனர். அரசு உயர்நிலைப் பள்ளி குழந்தைகள் சத்துணவு கூடம் 11 கோயில்கள் ஒரு குளம் ஒரு ஏரி ஆகியவை உள்ளன. தனி ஊராட்சியாக அறிவிக்கும் தகுதி உள்ளது. இதை கருத்தில் கொண்டு தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி பல்வேறு முறை மனு அளித்தோம். மாவட்ட ஆட்சியர் முதல் முதல்வர் வரை 1996 முதல் 2015 வரை மூன்று முறை கிராம ஊராட்சி மூலம் தீர்மாணம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினோம். அப்படியும் அரசு அசையவில்லை. இதற்காக 2017ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றம் 2018 இரண்டுவார காலத்திற்குள் நெடி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டுமென தீர்ப்பு வழங்கியது.
அதன் பிறகும் அதிகாரிகள் மெத்தனமாகவே உள்ளனர். மீண்டும் 6.1.2020 அன்று மாவட்ட ஆட்சியர் நடத்திய மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் நினைவூட்டல் மனு அளித்தோம். அதன்பிறகு ஆட்சியர் தலைமையில் எங்கள் கிராமத்தில் மக்கள் பிரதிநிதிகளான எம்பி, எம்எல்ஏ மற்றும் தொண்டு நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தி தனி ஊராட்சியாக பிரிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எனக்கு ஒரு கடிதம் வந்தது.
அதன்பிறகும் அதிகாரிகள் மெத்தனமாகவே உள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுத்துள்ளேன். எங்கள் ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டத்தில் கண்டாச்சிபுரம், சின்னசேலம், கல்வராயண்மலை, மரக்காணம், விக்கிரவாண்டி ஆகிய புது தாலுக்காகளும் கிளியநூர், மணலூர் பேட்டை, ஆகிய ஒன்றியங்களும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஊராட்சிகளுக்கு மட்டும் தயக்கம் காட்டுகிறார்கள் அதே நேரத்தில் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் இருந்த காந்தலவாடி ஊராட்சியில் பாதியாகவும் சிறுத்தனூர் ஊராட்சியில் பாதியாகவும் கருவேப்பிலைபாளயம் என்ற ஒரு கிராமத்தை இரண்டு துண்டுகளாக்கி மேற்படி ஊர் இரு ஊராட்சிகளிளும் சேர்க்கப்பட்டது. அதிலும் சிறுத்தனூர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் காந்தலவாடி விழுப்புரம் மாவட்டத்திலும் சேர்க்கப்பட்டன. ஒரு ஊரை இரு கூறாக்கியதை கண்டித்து அந்த கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதன் விளைவாக இரு கிராம ஊராட்சிகளிலும் பிரிக்கப்பட்டு கிடந்த இரு-கருவேப்பிலை பாளையத்தையும் ஒன்றினைத்து கருவேப்பிளைப்பாளயம் தனி ஊராட்சியாக ஆக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை 14.2.2020 அன்று இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் மக்கள் போராடினால்தான் ஊராட்சிகள் பிரிக்கப்படும் என்று அரசே வழிகாட்டியுள்ளது.2017-ல் இருந்து போராடிவரும் எங்கள் நெடி கிராமம் தனி ஊராட்சியாக மாறும் வரை கிராமமக்கள் ஆதரவோடு எங்கள் போராட்டம் தொடரும் என்கிறார் வெங்கடேசன். இதேபோல் ஒலக்கூர் ஊராட்சியல் உள்ளது தாதாபுரம் இந்த ஊராட்சிக்கு உட்பட்டது செங்கேணிகுப்பம் கிராமம். எங்கள் ஊருக்கும் தாதாபுரத்திற்க்கும் 4 கிலோமீட்டர் தூரம் உள்ளது. எங்கள் செங்கேணிகுப்பம் கிராமத்தில் மட்டும் 1250 வாக்களர்கள் உள்ளனர். எனவே எங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக பிரித்து அறிவித்திட கோரி ஊர் மக்கள் ஒத்துழைப்போடு பல்வேறு அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளேன் என்கிறார் செங்கேணிகுப்பத்தை சேர்ந்த ராஜேந்திரன்.
அதேபோல் எங்கள் ஊர் செங்கமேடு கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொளார் ஊராட்சியல் உள்ளது. எங்கள் ஊரில் 5000 வாக்காளர்கள் உள்ளனர். ஒன்றிய அளவில் 64 ஊராட்சிகளை கொண்ட பெரிய ஒன்றியம் அதிலும் மூன்று நான்கு ஊராட்சிகளை இணைத்து ஒரு ஒன்றிய கவுன்சிலர் பதவி அளித்துள்ளனர். ஊராட்சிக்கு மட்டும் ஒரு கவுன்சிலர் பதவி கொண்டது. காரணம் செங்கமேடு புத்தேரி கொள்ளத்தங்குறிச்சி குடிக்காடு திடிர்குப்பம் என இப்படி கிராமங்களை உள்ளடக்கியது.
எனவே எங்கள் ஊருக்கும் தொளார் கிராமத்திற்கும் நான்கு கிலோமீட்டர் தூரம் உள்ளது. தொளார் ஊராட்சியில் இருந்து எங்கள் ஊரை பிரித்து தனி ஊராட்சியாக உருவாக்க வேண்டும். அதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. எனவே மக்கள் சிரமத்தைப் போக்கவும் நிர்வாக வசதிக்காகவும் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு விரைவாக சென்று சேரவும் தனி ஊராட்சி அவசியம். மேலும் பல கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சி தலைவராக உள்ளவர்களால் அனைத்து மக்கள் தேவைகளையும், அரசு திட்டங்களையும் செயல்படுத்துவது மிகுந்த சிரமமாக இருக்கும். கிராமங்கள் தன்னிறைவு பெற கிராம ஊராட்சிகள் புதிகாக உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் தற்போது வார்டு கவுன்சிலராக உள்ள வேல்முருகன்.
தமிழக மக்கள் பெரிய ஊராட்சிகளை பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி மனு அனுப்புவது போராட்டம் நடத்துவது நீதிமன்றத்தை அணுகுவது அதிகரித்துள்ளது. மேலும் சில அமைச்சர்கள் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் சிபாரிசு அடிப்படையில் 2019ல் சில ஊராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை கொண்ட ஒரு குழு அமைத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய ஊராட்சிகளையும் கணக்கெடுத்து அவைகளை பிரித்து தனிதனி ஊராட்சிகளாக அறிவிக்க வேண்டும்.
இந்த நிலையில் கடந்த 5ம் தேதி விழுப்புரம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் வார்டு வரைமுறை பணிகள் குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடந்தது (விழுப்புரம் உட்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை). இதில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உட்பட பல உயர் அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளான எம்பி எம்எல்ஏக்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் மைலம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் மாசிலாமணி பேசும் போது, எனது தொகுதியில் பெரமண்டூர், காட்டராம்பாக்கம், நெகனூர், பெரப்பந்தாங்கல், நெடிமேடியனூர், உட்பட 20 க்கும் மேற்ப்பட்ட பெரிய ஊராட்சிகள் உள்ளன. அவைகளை பிரித்து புதிய ஊராட்சிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார் அதற்கு பதிலளித்து பேசிய தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி நீங்கள் அளித்த அணைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் நேரடி ஆய்வு செய்து அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று பதில் கூறியுள்ளார். தமிழக அரசு பெரிய ஊராட்சிகளை பிரித்து புதிய ஊராட்சிகள் உருவாக்கபட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம் அரசு அலட்சியம் செய்தால் மக்கள் போராட்டத்தில் குதிக்க தயாராக உள்ளனர்.