ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் 90 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,
ஜெயலலிதா நம்மை விட்டு பிரிந்த போது சிலரது சதியால் பிளவு ஏற்பட்டது. ஆனால் லட்சக்கணக்கான தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் சதிகாரர்கள் ஓரம் கட்டப்பட்டு அ.தி.மு.க.வின் உண்மை விசுவாசிகள் ஒன்று சேர்ந்தோம். தமிழகத்தில் 27 ஆண்டு காலம் ஆட்சி நடத்தி சாதனை நிகழ்த்தியது அ.தி.மு.க. இயக்கம் ஆகும். இதை யாராலும் அசைக்க கூட முடியாது.
புராண காலத்தில் விஷ்ணுபகவான் எடுத்த அவதாரத்தை போன்று பொதுமக்களின் நலன் கருதி பல அவதாரங்களை எடுத்தவர் ஜெயலலிதா. அன்னை தெரசாவின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற அவர் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தினார். தற்போதைய முதல்- அமைச்சர் அந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் ஏழ்மை குடும்பங்களில் பிறந்த பெண்கள் வறுமை காரணமாக திருமணமாகாமல் இருந்த நிலையில் அவர்களின் பெற்றோர் கவலையில் இருந்தனர். இதை கருத்தில் கொண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை பெண்களுக்கு தனது சொந்த பணத்தில் திருமணத்தை நடத்தி வைத்தார் என்று பேசினார்.