தமிழ்நாட்டின் 1076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையில் வரலாற்று ரீதியாக ஆமைகள் கூடு கட்டுவதற்காக வருகை தருகின்றன. ஆலிவ் ரிட்லி, பச்சை ஆமை, ஹாக்ஸ்பில் ஆமை, லாக்கர்ஹெட் ஆமை மற்றும் லெதர்பேக் ஆமை ஆகிய ஐந்து வகையான கடல் ஆமைகள் தமிழக கடற்கரைக்கு வருகை தருகின்றன. இவற்றில், முக்கியமாக ஆலிவ் - ரிட்லி ஆமைகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. அவை கூடு கட்டுவதற்கும் மற்றும் அவற்றின் தீவனமாகவும் தமிழ்நாட்டின் தென்பகுதியான கோரமண்டல் கடற்கரை அறியப்படுகின்றன, அதேசமயம் மற்ற வகை ஆமைகள் தற்போது கூடு கட்டுவது அரிதாக உள்ளன.
கடல் ஆமைகளுக்கான பருவம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் தொடங்கும். இந்நிகழ்வின் போது வனத் துறையானது தற்காலிக குஞ்சு பொரிப்பகங்களை உருவாக்குதல், ஊழியர்களுக்கான வழிகாட்டுதல் திட்டம் மற்றும் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துதல், தினசரி இரவு ரோந்துப் பணிகளைத் தொடர்தல். மாணவர்கள் கடல் ஆமைகள் பாதுகாப்பு கூடு கட்டுதல் (SSCN) மற்றும் பிற தன்னார்வலர்களுடன் இணைந்து ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. வனத் துறைப் பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள், இந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்டவர்கள் மூலம் கூடுகள் அடையாளம் காணப்பட்டு. வனத் துறையின் குஞ்சு பொரிப்பகங்களில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு ஆமைகள் கூடு கட்டும் பருவத்தில் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 8 பிரிவுகளில் 53 குஞ்சு பொரிப்பகங்களை வனத்துறை அமைத்தது. 2363 கூடுகள் மூலம் மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 775 முட்டைகள் சேகரிக்கப்பட்டு, அவை துறைசார் குஞ்சு பொரிப்பகங்களுக்கு மிக நுட்பமாக இடமாற்றம் செய்யப்பட்டன. இந்த அனைத்து குஞ்சு பொரிப்பகங்களிலும் ஒவ்வொரு குஞ்சும் வெளிவரும் வரை இடமாற்றம் செய்யப்பட்டதிலிருந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு செய்யும் போது அனைத்து கூடுகளின் அளவீடுகள் மற்றும் வெப்பநிலை உட்பட அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. அதனையொட்டி இந்த ஆண்டு வனத்துறை, 2 லட்சத்து 15 ஆயிரத்து 778 ஆமைக் குஞ்சுகளைக் கடலுக்கு அனுப்பியுள்ளது. இதுவே. இதுவரை பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையில் அதிகபட்சமாகும்.
கடந்த ஆண்டு 1 லட்சத்து 82 ஆயிரத்து 917 குஞ்சுகள் அனுப்பப்பட்டன. கடலூர், நாகப்பட்டினம் மற்றும் சென்னை மாவட்டங்களில் முறையே கடலூர் 89 ஆயிரத்து648, நாகப்பட்டினம் 60 ஆயிரத்து 438 மற்றும் சென்னை 38 ஆயிரத்து 230 என அதிக அளவில் ஆமை குஞ்சுகளை அனுப்பியுள்ளன. இந்த ஆண்டு, வனத்துறையிலிருந்து 185 கள ஊழியர்களும் மற்றும் 264 தன்னார்வலர்களும் இந்த பாதுகாப்பு நடவடிக்கையில் தீவிரமாகப் பங்கேற்றனர். இத்துறையின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில், சென்னை மற்றும் நாகப்பட்டினத்தில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மையங்களை அமைப்பதாகத் தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது இந்த உயிரினங்களுக்கான பாதுகாப்பு முயற்சிகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.