இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை வீச ஆரம்பித்து, நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்நிலையில், மருத்துவமனைகளில் கூடுதலாக சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து கரோனா தடுப்பூசிக்கான முயற்சியை எடுத்து வருகின்றன. தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவிற்கு தடுப்பூசிகள் உள்ள நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் தற்போது நாளொன்றுக்கு சுமார் 300 பேர் வீதம் கரோனா பரிசோதனைக்கு வந்து செல்கின்றனர். அதே போல், கரோனா தடுப்பூசிக்கு அதிகபட்சமாக ஒருநாளைக்கு 150 பேர் வருகிறார்கள். இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரும் தலைவருமான வனிதா கூறுகையில், தடுப்பூசி போட வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு முன் வர மறுக்கிறார்கள் என்றும் கூறுகின்றார். தொடர்ந்து பேசிய அவர் தற்போது தலைமை அரசு மருத்துவமனையில் 20 டன் ஆக்சிஜன் இருப்பு உள்ளதாகவும், மொத்தம் 700 படுக்கைகள் உள்ள நிலையில் அதில் 380 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்புடன் உள்ளது. எனவே பொதுமக்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.