நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''திமுக தலைமையிலான கூட்டணி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் இடதுசாரி கட்சிகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பொது தொகுதியைக் கேட்க உள்ளோம். திமுக கூட்டணியில் கூடுதலாக தொகுதிகளை கேட்போம். திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் சமூகமான முறையில் பேசி தொகுதிகளை பங்கிட்டு கொள்வோம்.
பத்து கட்சிகள் உள்ள இந்த பெரிய கூட்டணி 2019 ஆம் ஆண்டு முதல் கட்டுக்கோப்பாக வலிமையாக இருந்து வருகிறது. எதிர்க்கட்சிகளை எச்சரிக்கும் பாசிச போக்கை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும். யார் எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம், பொது மக்களுக்கு தொண்டாற்றலாம். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை வரவேற்கிறோம்'' என்றார்.